• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

ஜோசப் அடிசன் :  Joesph Addison [1672-1719] 
ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஜோசப் அடிசன் அவர்களுக்கு எவராலும் மறுதலிக்க முடியாத பெரிய ஆசனம் உண்டு என்றாலும், இலக்கியம் தவிர்த்த காரணங்களுக்காக கூட இவர் பெரிதும் நினைவு கூறப்படுகிறார்.  அவரது காலம் இங்கிலாந்தில் காபி விடுதிகளின் காலம்.  லண்டனில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேலான காபி விடுதிகள் இருந்தன.  நாட்டின் அறிவு ஜீவிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசாங்க வேலைக்காரர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களுக்கும் கூடி எதையும் பற்றி கதைக்கும் கூடங்களாக இந்த காபி விடுதிகள் இருந்தன.  ஜோசப் அடிசனைப் பற்றி பேசும் போது அவரின் சம காலத்தவரான ஜோனதன் ஸ்விப்ட்டைப் பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாகிறது.  இருவருமே ‘தீமையை’ ஏசியவர்கள். ஆனால் ஸ்விப்ட் மிகவும் கடுமையான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார்.  அவரது சொல்லாடல்கள் சவுக்கு வீச்சுக்கள்;  அகப்பட்டவர்கள் துடித்துப் போனார்கள்; ரத்தம் கக்கினார்கள்.  ஆனால் அடிசன், தனது மெலிதான கிண்டலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.  மனிதத்தின் மீது தன்னுடைய நம்பிக்கையை எப்பொழுதுமே அடிசன் இழக்கவில்லை; ஆனால் ஸ்விப்ட் மனிதம் செத்துவிட்டதாகவே நம்பினார். 

முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக அடிசன் விமர்சகர்களால் சிலாகிக்கப் படுகிறார்.  இவரது காலம் வரை “நன்மை-தீமை” என்ற எதிர் துருவ குணாதிசயங்களில், மக்கள் நன்மை மீது நம்பிக்கையை இழந்திருந்த காரணத்தால், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் தீமையின் சக்திகளை பெருமைப்படுத்தி வந்தனர். (இழந்த சொர்க்கத்தில் ‘சாத்தான்’ உங்கள் நினைவில் தட்டுப்படலாம்)  இந்த சமன்பாட்டை மாற்றி அமைத்ததில் அடிசன் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு.  “நன்மை”யின் கரத்தை அடிசன் தன் தலைக்கு மேல் உயரத் தூக்கிப் பிடித்தார்.  ஆங்கில இலக்கிய வரலாற்றில் இந்தப் புள்ளியிலிருந்துதான், கவிஞர்கள் மற்றும் எழுத்துக் கலைஞர்கள் ‘நன்மையின்’ மகத்துவத்தைப் பற்றி பெருமையோடு எழுதத் தலைப்பட்டனர்.  அடுத்ததாக, தனது காலத்திய மனிதர்கள் அவர்களது குணாதிசியம் – பழக்கவழக்கம் பற்றி மிகவும் சுவராஸ்யமான கட்டுரைகளை தனது சகா ராபர்ட் ஸ்டீல் அவர்களுடன் சேர்ந்து பத்திரிகைத் தொடராக வெளியிட்டு ஆங்கில இலக்கியத்திற்கே ஒரு புது வகை எழுத்தை அறிமுகப் படுத்தினார்.  The Tatler  மற்றும் The Spectator ஆகியவை புதுவகைப் பத்தியாகும்.  இந்தப் பத்திகளில் இடம் பெறுகிற Sir Roger de Coverley என்ற கதா பாத்திரம் ஆங்கில இலக்கியத்தின் பக்கங்களில் அழியாதவாறு இடம் பெற்று விட்டது. 
 
இவரது வாழ்வு ஏற்றம் இறக்கம் இரண்டையுமே கொண்டது.  இவரது தந்தையார் ஒரு பாதிரி.  மெத்தப் படித்தவர்.  அடிசன் தனது பள்ளிப்படிப்பை லண்டனிலும், மேற்படிப்பை ஒக்ஸ்போர்ட் சர்வகலா சாலையிலும் முடித்தார்.  இவருக்கும் தனது தந்தையைப் போலவே பாதிரி ஆக ஆசை இருந்தும், மற்றவர்களின் வற்புறுத்தலால் அரசாங்கப் பணியில் சேர்ந்தார்.  தனது எழுத்தின் மூலமே அரசின் அதி உயர் பதவிகளைப் பெற முடியும் என்று நிரூபித்தவர்களில் அடிசன் முக்கியமானவர்.  அரசன் வில்லியம் அவர்கள் அடிசனுக்கு வருடம் முன்னூறு பவுண்ட் ஓய்வூதியம் கொடுத்தது மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுவராக பயணம் செய்யவும் பணித்தார்.  

ஆனால், மனிதனின் வாழ்க்கை விதிகளின் கைகளில் சாதாரணமாகவா உருட்டப்படுகிறது?  தான் சார்ந்திருந்த கட்சி பதவி இழந்ததின் தொடர்ச்சியாக, ஓய்வூதியம் உட்பட தான் அரசிடமிருந்த பெற்று வந்த பல சலுகைகளை மீண்டும் இழக்க வேண்டி வந்தது.  ஆனால் சில வருடங்களிலேயே மீண்டும் புது வாழ்வு பெற்றார் அடிசன்.  புதிய அரசின் ஆதரவை தனது எழுத்தின் வன்மையால் மீண்டும் பெற முடிந்த அடிசன், அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளராக உயர்ந்தார்.
அடிசனின் அந்திமம் தனது நண்பர்களோடு சண்டை பிடிப்பதில் கழிந்தது.  இவரின் பிரபல்யத்தை அலெக்சாண்டர் போப் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.  போப் அடிசனை கிண்டல் செய்து கிழித்தெறிந்தார்.  ஜோனதன் ஸ்விப்ட் மற்றும் ஸ்டீல் ஆகிய இருவரிடமும் அடிசன் கட்சி ரீதியாக வேறுபட்டதால் சண்டை போட வந்தது.  இவரது திருமணம் கூட மூன்று ஆண்டுகளே நீடித்தது.  1716-ல் ஒரு வயதான விதவையை மணந்த அடிசன், மூன்று வருடங்களுமே கூட ஒரு மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இவரது மரணம் 1719-ல் அமைதியாக சம்பவித்தது.

அடிசன் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றி ஜான்சன் கூறியது இந்த சிறு நினைவுக் குறிப்பை முடித்து வைக்க மிகவும் பொருத்தமானது: “Give nights and days, Sir, to the study of Addison if you mean to be a good writer, or what is more worth, an honest man.”
----

வில்லியம் கோல்டிங் [WILLIAM GOLDING]
தனது முதல் நாவலின் மூலம் உலகப் புகழ் கிடைத்து முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்த நாவலின் பொருட்டே நோபல் பரிசு பெற்றவர் வில்லியம் கோல்டிங். இங்கிலாந்தில் காரன்வெல் என்ற இடத்தில் பிறந்தவர். 1911ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி பிறந்தார். தந்தையார் ஆசிரியர், தாயார் ஒரு சமூகப் போராளி. பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டி போராடியவர் இவரது தாயார்.
 
கோல்டிங் 1935ம் ஆண்டு சாலிஸ்பரி என்ற இடத்தில் ஆங்கிலமும் தத்துவம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். ஆனால் சில வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போர் திடகாத்திரம் உள்ள இளைஞர்களை எல்லாம் தன்னுள் பங்கேற்க அழைத்தது. 1940ல் இங்கிலாந்து கடற்படையில் சேர்ந்தார். போர் அனுபவங்கள் இவரை மிகவும் மோசமாக பாதித்தது என்று கூற இடமுண்டு. தனது முதல் நாவலான Lord of the Flies என்ற நாவலை 1954ம் ஆண்டு வெளியிட்டார். ஏறத்தாழ முப்பது வருடங்கள் கழித்து, 1983ம் ஆண்டு, இதே நாவலுக்காக நோபல் பரிசு இவருக்கு கிடைத்தது. 1993ம் வருடம் தனது சொந்த ஊரிலேயே மரித்துப் போனார்.

இவரது இளமைக் காலம் ருசிகரமானது. தனது ஆரம்பக் கல்வியை தந்தையாரின் பள்ளியிலேயே முடித்தார். தனது பனிரெண்டாவது வயதில் ஒரு நாவல் ஒன்று எழுதி அம்முயற்சியில் தோற்றுப்போன அனுபவமும் இவருக்கு உண்டு. இது தந்த ஏமாற்றத்தால் ஒரு முரட்டுப் பையனாக மாறி தனது நண்பர்களை அரட்டி உருட்டி வந்ததாக இவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.அடுத்தவர்களை அவமானப் படுத்துவதில் தான் மிகவும் ஆனந்தப்படுபவனாகஇருந்திருக்கிறேன் என்று அவரே சொல்கிறார்.
 
இவர் ஒரு விஞ்ஞானி ஆவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர் தனது பட்டப் படிப்புக்காக தேர்ந்தேடுத்ததோ ஆங்கில இலக்கியம். ஆக்ஸ்போர்ட் சர்வகலா சாலையில் 1934ம் ஆண்டு தனது இளங்கலை பட்டத்தை முடித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான கவிதைகள்”, விமர்சகர்களால் கடுமையாக தாக்கப்பட்டது, இவரை மோசமாகப் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.
 
படிப்பு முடிந்ததும் அங்கொன்றும் அங்கொன்றுமாக சில வேலைகள் செய்து வந்த கோல்டிங் எதிலும் மனம் ஊன்றாமல், தந்தையாரின் தொழிலுக்கே வந்தார். ஆங்கில இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களை தனது சொந்த ஊரில் இருந்த பள்ளியில் கற்பித்துக் கொடுத்து வந்தார். தன்னிடம் படித்து வந்த பையன்களில் சில மிகவும் முரடர்களாக இருந்ததைக் கண்ட கோல்டிங், அந்தப் பையன்களில் வார்ப்பிலேயே தனது முதல் நாவலுக்கான மையமான சில கதாபாத்திரங்களை உருவாக்கினார். கற்பித்தல் என்பது இவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின் அழைப்பை இவரால் நிராகரிக்க முடியவில்லை. 1940ல் போருக்குச் சென்ற கோல்டிங், போரின் இறுதி வரை படை வீரராகவே தொடர்ந்தார்.
----

பெனடிக்ட் டிமோதி கார்ல்டன் கம்பர்பெச் [BENEDICT TIMOTHY CARLTON CUMBERBATCH]
இவர் லண்டனில் 1976-ம் ஆண்டில் பிறந்தவர். தாய் தந்தை இருவருமே நடிகர்கள். தாய் வழித் தாத்தா மற்றும் தந்தை வழி தாத்தா இருவருமே மிகப் பெரிய பேர்வழிகள். ஒருவர் கடற்படையில் கமாண்டராக இருந்தவர். இன்னொருவர் தூதர். பள்ளிப் படிப்பை கம்பர்பெச் இங்கிலாந்தில் முடித்த பிறகு, ஓவியத்தில் பயிற்சி பெற்றார். இதற்கான Harrow School உதவித் தொகையையும் பெற்றார். பிறகு, இந்தியாவில் டார்ஜிலிங் நகரில், திபெத்திய துறவியகம் ஒன்றில், சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக இருந்தார். மீண்டும் தாய்நாடு. மான்செஸ்டர் சர்வகலா சாலையில் நாடகம் பற்றி மேற்படிப்பு முடித்தவுடன், லண்டன் நிகழ்த்துக் கலை மற்றும் இசை வித்வத்சபையில் இன்னொரு பட்டம்; பிறகு, செவ்வியல் பாவனை என்ற ஒரு முதுகலை பட்டம். இதற்குள்ளாகவே, திரைப்படங்களில் நடிப்பதற்கான அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

கம்பர்பெச் நாடகம், தொலைகாட்சி, சினிமா, மற்றும் வானொலியில் தனது விலக்கான பங்களிப்பை செய்து வருகிறார். அறிவியல் ஆய்வாளர் Alan Turing-ஆக The Imitation Game என்ற படத்தில் நடித்தது அண்மைக் காலத்தில் மிகவும் முக்கியமான பாவனை வெளிப்பாடு என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக, Golden Globe, British Academy of Film and Television விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுக்காகவும், இந்தப் படத்திற்காக, இவர் பரிந்துரைக்கப்பட்டார். நடிப்புலகில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக எலிசபெத் அரசி இந்த ஆண்டில் Birthday Honours என்ற கௌரவத்தால் இவரை பெருமைப்படுத்தி உள்ளார்.
 
இவரது மனைவி சோபி ஹன்டர் ஒரு நாடக நெறியாளர். இவர்களுக்கு இந்த ஆண்டில் ஒரு மகன் பிறந்துள்ளான். இவரைப் பற்றிய எதிர்பார்ப்பு தீவிர சினிமா ரசிகர்களிடம் நிறைய இருக்கிறது.

இன்று தீவிரமாக எழுத்துலகில் இயங்கிவரும் பலர் தமிழாசிரியர்களாக இல்லை.  எஸ்ரா ஆங்கில இலக்கிய மாணவர்.  ஜெயமோகன் தமிழ் இலக்கியம் நிறுவனங்கள் வாயிலாக கற்றவர் அல்ல.  தமிழில் மிகவும் பிரபலமாக விளங்கிய சுஜாதா, த.ஜெயகாந்தன் மற்றும் சுரா ஆகியோர் தமிழ் இலக்கிய மாணவர்கள் அல்லர்.  இவர்கள் அனைவருமே தமிழ் கருத்துலகத்திற்கும், தமிழ் படைப்பு மொழிக்கும் பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள் என்பதில் அபிப்பிராய பேதங்கள் பெரிதாக எதுவும் இருக்க முடியாது.  தமிழ் இலக்கியம் முறையாக கற்று, இனிமையான தமிழில் எழுதிவரும் பிரபஞ்சன் போன்றவர்களும் உடனே நம் நினைவுக்கு வருகிறார்கள்.  இருப்பினும், தமிழ் முறையாகக் கற்றவர்களின் படைப்பு மொழியில் ஒரு இறுக்கம் வந்துவிடுகிறதோ என்ற எண்ணம் எனக்கு பல வருடங்களாக உண்டு.  இலக்கண சுத்தமாய், விதி மீறல்களுக்கு இடமெதுவும் கொடுக்காமல், சிந்தனையைக்  கூட மரபையொட்டியே அமைத்துக் கொள்ளுதல், வழக்கொழிந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துதல், மறந்தும் பிறமொழிச் சொற்களை பயன்படுத்தாதிருத்தல் உள்ளிட்ட சில பிரத்யேகமான படைப்பு மொழிக் கூறுகள் இத்தகையோரிடம் பொதுவாகக் காணப்படும்.  சுஜாதாவினுடையதைப் போன்ற எளிதான நடையோ, ஜெயகாந்தனுடையதைப் போன்ற தீவிரமான ஒரு நவ மிடுக்கோ இன்றி, சற்றே மோஸ்தர் இழந்த ஒரு மொழி நடையை இத்தகையோர் தமது இயல்பெனக் கொண்டுள்ளனர்.  மேல்நிலைப் பள்ளி தமிழ்ப் பாட புத்தகங்களின் உரைநடைப் பகுதிகள்  மேற்கண்ட கருத்தை ஊர்ஜிதப்படுத்தும் ஆவணங்களாகும்.
 
நடுவு நிலைமையில் இருந்து ஆராயும் பொழுது, மேற்சொன்னவை சரியோ தவறோ, இத்தகைய கருத்து என்னுடைய வாசிப்பைப் பாதித்து வந்துள்ளது.  புத்தகங்கள் வாங்கப் போகும்போது, விற்பனையாளர் பரிந்துரைக்கும் நூலாசிரியர்கள் தமிழ் மேற்படிப்பு பின்னணி உள்ளவரென்று தெரிந்தால், அவர்களின் நூற்களை நிச்சயம் வாங்க மாட்டேன்.  (விலக்குகள் உண்டு)  இது ஒரு பரிதாபமான பேதமைதான்.  சந்தேகமேயில்லை.  மிக அண்மையில், புத்தகக் கடை ஒன்றிற்கு சென்றிருந்த போது, கடை உரிமையாளரிடம் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கும்படி கேட்டேன்.  பாராட்டும்படிக்கான வாசகர் அவர்.  புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பது மட்டுமன்றி, அவைகளைப் பற்றிய சொந்தக் கருத்துக்களை, தன் வாசிப்புப் பின்புலத்தில் உருவாக்கி வைத்திருப்பவர்.  எனது வாசிப்புத் திசையை ஓரளவு ஊகிப்பவர்.  சில புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தவர், திடீரென மகுடேசுவரன் எழுதியுள்ள “களிநயம்” என்ற கட்டுரைத் தொகுப்பைக் காட்டி சொன்னார்: ‘நான் இன்னும் படிக்கவில்லை.  ஆனால், படித்த வாசகரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. லைட் ரீடிங்தான், இருப்பினும் இவரின் மொழி நடையை நீங்கள் ரசிப்பீர்கள் என்பது எனது யூகம்.’  வாங்குவதற்கு முன்னால், மரியாதை நிமித்தம் இரண்டொரு பக்கங்களை நின்றவாறே புரட்டிய பொழுது, மகுடேசுவரன் [இவர் ஒரு கவிஞர் என்றும் தெரிய வந்தது] தமிழ் இலக்கியம் முறையாகக் கற்றவர் என்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.  வேண்டாமென்று சொல்ல நினைப்பதற்கு முன்னால், என் வசம் கிட்டத்தட்ட இந்தப் புத்தகம் திணிக்கப்பட்டது.  மனமின்றியே வாங்கிவந்தேன்.

‘களிநயம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பு.  இருபது கட்டுரைகள் கொண்டது.  தமிழினி பதிப்பகம் திசம்பர் 2014-ல் வெளியிட்டுள்ளது.  144 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பை சந்தேகமாகவே ஆரம்பித்து, சில பக்கங்களின் வாசிப்பில் கவரப்பட்டு, போகப்போக பெரும் வேகமெடுத்து, முதல் அமர்விலேயே முழுவதுமாக முடித்து விட்டேன்.  கொடும் இலக்கியப் பாங்கான தமிழ் இதில் இல்லை என்பது முதல் காரணம்.  வார்த்தைகள் ஒன்றின் பின்னால் ஒன்று மிகச் சரளமாக அணிவகுத்து வருகின்றன.  தமிழ் இலக்கிய மாணவர் என்றாலுங்கூட, மணிப் பிரவாள நடைதான்.  தூய தமிழ் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை.  ஆரம்பிக்கும் முதல் வாக்கியத்திலேயே கட்டுரையைப் பற்றிய மொத்த தெளிவும், அதனால் உருவாகும் ஒரு திட்டமும் மகுடேசுவரன் வைத்திருக்கிறார்.  இவரது வார்த்தைப் பிரயோகங்களை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்.  மொழி பெயர்ப்புப் பதங்கள், வழக்கொழிந்த தமிழ்ப் பதங்கள் மற்றும் தமிழ் அல்லாத பிற மொழி வார்த்தைகளின் ஒலிபெயர்ப்பு.  மொத்தப் புத்தகத்தைப் படித்த பின்பு, கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கும் கருத்துக்களை விட, செய்நேர்த்தி மற்றும் மொழி நடை வாசகரைக் கவருகிறது. 
 
மேற்பத்தியில் சொன்னவாறு, மகுடேசுவரன் பயன்படுத்தியுள்ள மொழிபெயர்ப்புப் பதங்கள் மற்றும் வழக்கொழிந்த தமிழ்ப் பதங்களுக்கான பட்டியல் ஒன்று புத்தகத்தை வேகமாகப் புரட்டும்பொழுதே கண்படுகிறது.

மொழிபெயர்ப்புப் பதங்கள்:  மகிழுந்து [car], இருப்பூர்தி [train],  அகல் திரைப்படம் [cinimascope movie], அலுப்பூட்டும் சொல்முறைகள் [cliche], பைஞ்சுதை [cement], கடவுத்தாள் [passport], நுழைவிசைவு [visa], ஏற்றுகை அட்டை [boarding pass], பறப்புருதி [air clearance signal], பொருளாட்சி வகுப்பு [economy class], மின்செயல் பூட்டு [electronic lock], ஈருருளி [mobike], சாலைப் பற்று [road grip], உதைத்துக் கிளப்பும் வகை [kickstart], எரிபொறி [eigine], புறத்தாங்கி [side stand], நடுத்தாங்கி [center stand], அடிச்சட்டம் [chassis], பற்சக்கரப் படி [gear], முகவை [litre], எரிநெய் [gasoline], எரிநெய் சாவடி [gas station],  எரிபொறி நெய் [lubricant], நகர்வு நிறுத்தி [brake], நிறுத்தக் கட்டை [brake shoes],  நீர்ப்படிக ஒளித்திரைப் பெட்டி [liquid crystal display televisions], எரிகுமிழ் [spark plug], ஏதிலிகள் [refugees], இன்னும் பிற. 
    
வழக்கொழிந்த தமிழ்ப் பதங்கள்:  தோற்றுவாய், மருவல், சுபிட்சம், மருங்கு, மாடவிதானம், கானகம், துலக்கம், நடுகிடை, அளவுமானி, இலங்குதல், சிகாமணி, நிறைசூலி, முகிற்புகை, வினைவல்லல், தகை, மாற்றுறவு [புது சொல்லாக்கம்!], கட்புலம், தகுநிலைமை, ஐம்பொறி, பேரிறை, உயவு, இன்னும் பிற.

மகுடேசுவரன் திருக்குறளுக்கு விளக்குவுரை எழுதியுள்ளார் என்பதும், அதிலிருந்து சில குறள்களின் விளக்கவுரைகளை இப்புத்தகத்தின் கடைசிக் கட்டுரையாக தந்திருக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.  சொடுக்கப்பட்டுள்ள ஆறேழு குறள்களுக்கான விளக்கக்களைப் படித்தவரை, சுஜாதா அவர்களுடையதை விட விரிவானது என்றும், மூலப் பிரதியை விட்டு விலகாமலேயே விளக்கத்தைத் தர முயன்றுள்ளார் என்றும் தெரிகிறது.  “அன்பிற்கும் உண்டோ ...” என்ற குறளுக்கு ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் இருந்து ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி [intertextuality] விளக்கியிருப்பது, மூலப் பிரதியானது எத்தகைய நவீனச் சூழலிலும் தன் பொருளை இழக்காமல் நிற்க வல்லது என்பதை நிறுவுகிறது.
  
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.  மகுடேசுவரன் சில தருணங்களில், தன்னுடைய கருத்துக்களின் புதுமையிலும், தீர்க்கத்திலும் நம்மை வியப்படைய வைக்கிறார்.  தன்னுடைய தந்தையார் உயிருடன் இருக்கும்போது அவர் விற்று விட்ட நிலத்தின் மேல் வழக்கு ஒன்று தாக்கல் செய்து அதை வாங்கியவரிடமிருந்து திருப்பிக் கேட்க முடியும் என்று உறவினர்கள் அறிவுரைக்கும் போது, அதை மறுக்கும் மகுடேசுவரன், தந்தையாரின் முடிவுகளை மாற்றுகிற வாய்ப்பை அவர் உயிருடன் இல்லாத காலத்தில் பயன்படுத்த முனைவது அறமாகாது என்கிறார்: “... நம் மூதாதையர் செய்த செயல்களைச் சரி தவறென்று தீர்ப்பு வழங்கும் இடத்தில் நம்மை நாமே இருத்திக் கொள்கிறோம்.  எந்த சூழ்நிலையில், எந்தத் தவிப்பில் அத்தகைய நிலைக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதைக் கருதுவதில்லை.  அதன் பின்னால் காலத்தில் நிறம் கரைந்துவிட்ட ஆயிரம் நியாயங்கள் இருக்கக்கூடும்.  நம் பெற்றோர்கள் குற்றங்குறைகளோடு இருந்திருக்கலாம்.  அவர்களுக்கும் உள்ளங்கனிந்த மாற்றுறவுகள் ஏற்பட்டிருக்கலாம்.  அப்படி இருந்தால், அவ்வுறவைத் தாயென்றோ தந்தையென்றோ வணங்கி நிற்பதின்றி வேறொன்றும் சொல்லத் தகுமோ நம் நெஞ்சம்?”.

இன்னொரு கட்டுரையில், படித்தவர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளூரில் அலைந்து திரிவதும், படிக்காதவர்கள் அயல்நாடுகளில் பணிபுரிய நம்பிக்கையுடன் விமானங்களில் பறப்பதையும் பற்றிக் குறிப்பிடுகையில், “முன்னதாக, மஸ்கட் செல்லும் விமானமொன்று கிளம்பத் தயாராக இருந்தது.  அப்போதுதான் கவனித்தேன்.  அழுக்குடையும்  ரப்பர் செருப்பும் அணிந்தவர்கள் கூட அந்த விமானத்தைப் பிடிக்கப் பரபரத்தனர்.  அடிப்படைத் தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட தோற்றத்திலிருந்த ஒருவர் என்னை நாடி மேற்சொன்ன தம் படிவத்தை நிரப்பித் தரக் கோரினார்.  அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னார்.  எனக்கு வியப்புத்தான்.  வண்டி வண்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற வாய்ப்பில்லாதவர்களாக இருப்பதும், எழுதப் படிக்கத் தெரியாத முயற்சியாளர்கள் பன்னாட்டு விமானத்தில் பறப்பதும் இருவேறு உலகத்து இயற்கையோ என்று யோசித்தேன்.”

கொங்கு வட்டார வழக்கு, நாஞ்சில் நாடனும் தமிழ்கவிதை மரபும், தந்தை சொல் போன்ற கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. கவிஞர் மகுடேசுவரன் தன்னை கம்பீர்யமான உரைநடைக்காரர் என்பதை இத்தொகுப்பு மூலமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு உரக்க அறிவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
 
[களிநயம், மகுடேசுவரன், தமிழினி, சென்னை, உரூபா 110/-]  

மனித வரலாற்றின் நீளத்தில் அவ்வப்போது பல அறிவுத் துறைகள் மனிதனின் சௌகர்யத்தையும், புரிதலையும் அதிகரித்தபடியே உள்ளன. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சாதனம் என்றாலும், அது ஒரு அறிவுத் துறையும் கூட.  கடவுளைப் போலவே, மொழியைப் பற்றியும் முழுவதுமாக அறிந்து கொண்டவர் யாருமில்லை.  கார் முன்னே நகர நகர பிடிபடாமல் வேகமாக ஓடும் அதன் முக ஒளிக்கற்றையைப் போலவே, தோண்டத் தோண்ட இதுவரை புரியாத பல விடயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன, மொழியைப் பொறுத்த வரை.
 
மொழியை வரையறுக்க முயற்சித்தது இலக்கணம்.  இப்படித்தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து சமுதாயத்தின் மீது திணிக்க முயன்று தோற்றது இலக்கணம். ஒவ்வொரு விதியும் அதன் prescriptive தன்மை காரணமாகவே தோற்றுப் போனது.  மொழியியல் என்ற அறிவுத் துறை, மொழியின் வரலாற்றில் மிக அண்மையில் உருவானது. இது விதிகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  முற்றிலும் descriptive தன்மை கொண்டது.  “மொழியைப் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுத்துறை” என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொள்ளும் மொழியியல், மொழியை அது எப்படி பேசப் படுகிறதோ அந்த வடிவத்தையே அதிகாரப்பூர்வ ஒன்றாகக் கருதி அதன் தன்மைகளை, வரலாற்றை, பிறவற்றோடான ஒப்பீட்டை மேற்கொள்கிறது.  மேலும், மொழியோடு அறிவியல், தத்துவம், வரலாறு, புவியியல், மானுடவியல், தர்க்கம், அரசியல் உள்ளிட்ட பிற துறைகள் மேற்கொள்ளும் உறவாடலை விவரிக்க முயல்கிறது.  “ஒன்றின் தன்மைகளை அறிந்து கொள்ளல் அதையே அறிதல்” என்பதையே மொழியியல் திரும்பத் திரும்ப பேசுகிறது. 

மொழியியல் ஒரு பிரத்யேகமான அறிவுசார் துறை.  இதைப் பயில வாசிப்பு ரீதியாக பல கட்ட முன்னேற்பாடுகள் அவசியம்.  முறையான அறிமுகமும், கற்பித்தலும் பயில்பவருக்கு இன்றியமையாதது.  மொழியியல் என்ற துறைக்கு தமிழகத்தில் ஒருமித்த வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது.  பல்கலைக் கழக தமிழ்த் துறைகள் மொழியியல் என்னும் அறிவுத் துறையை தமக்கிணையான ஒன்றாகக் கருதியதில்லை.  அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், பின்னர் 1980களின் மத்தியில் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகியவை மட்டுமே மொழியியல் என்ற தனித் துறையைத் தோற்றுவித்தன.  மைசூரில் ‘இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்’ மைய அரசால் துவங்கப் பெற்று மொழியியல் பின்னணியில் இந்திய மொழிகளை ஆய்வுக்குள்ளாக்கி வருகிறது.  ஆனாலும், எண்ணிக்கை அளவில் இவை மிகவும் சொற்பமே.  மொழியியல் துறையில் பட்ட மேற்படிப்பையோ, ஆய்வையோ நடத்தும் மாணவருக்கு வேலைவாய்ப்பும் அரிதாகவே உள்ளது.  தமிழ்த் துறைகளும், ஆங்கிலத் துறைகளும் மொழியியல் துறையை மட்டம் தட்டியே வைத்திருக்கின்றன.  இதில் நிறுவன அரசியலின் பங்கு மிக அதிகம்
. 
தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள வேண்டுமானால், அவருக்கு பிரத்யேகமான ஏற்பாடுகள் தேவையில்லை.  தமிழ் இலக்கிய அறிமுக நூற்கள் ஏராளமாக கிடைக்கின்றன.  மலிவு விலைப் பதிப்பிலும் கூட.  அவருக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்ய நமது சமூகத் தளத்தில் நிறைய விற்பன்னர்கள் முன்வருவர்.  பல்வேறு இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள், பயிலரங்குகள் – இது பொருள் பற்றி – கல்லூரிகளும், சர்வகலா சாலைகளும் நடத்திய வண்ணமே உள்ளன.  ஆங்கில இலக்கியத்தைப் பற்றிய அறிமுகம் வேண்டுபவருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலைமை ஏறக்குறைய இதுதான்.  ஆனால், மொழியியல் பற்றிய ஆர்வம் யாருக்கேனும் உண்டாகுமாயின், அவருக்கு இத்தகைய வசதிகள் தற்சமயம் இங்கு திருப்தியுறும் விதமாக இல்லை. மொழியியலைப் பற்றிய அறிமுக நூற்கள் மிகக் குறைவே.  கிடைக்கின்ற சொற்ப அறிமுக நூற்களும் கூட, சர்வகலா சாலைகளின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டவை.  மருந்துக்கும் கூட சுவராஸ்யம் ஏற்படுத்தாதவை.  இந்தப் புத்தகங்களை வாசிக்க முற்படும் எவரும் மொழியியல் என்பது இன்னும் பெயரிடப்படாத ஒரு கிரகத்தின் அமைப்பியலைப் பற்றியது என எண்ணத் தலைப்படக் கூடும். 

இந்த நிலையில் ‘அடையாளம்’ வெளியீடாக “மொழியியல் – தொடக்க நிலையினருக்கு” என்ற Terence Gordon எழுதிய நூல் தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் மொழிபெயப்பில், மூலத்தில் உள்ள Susan Wilmorth எனும் சைத்ரீகரின் ஓவியங்களைத் தாங்கி அழகுற பதிப்பிக்கப் பெற்றுள்ளது.  முடிந்தவரையில், மொழிபெயர்ப்பு எளிமையாகவே உள்ளது.  சில இடங்களில் வாசகர் கருத்துக்களை உள்வாங்குவதில் சிரமத்தை உணர்வாரானால், அது கருத்தின் தன்மையைப் பொறுத்ததேயொழிய, மொழிபெயர்ப்பின் தரக்குறைவால் அல்ல.  மொழிபெயர்ப்பாளர் பிரசித்தி பெற்ற மொழியியலாளர் ஒருவரின் துணைவியார் என்பது பெரிய அளவில் அவருக்கு உதவியிருக்கக் கூடும். 

 உலகில் மொழிகள் எப்படி பிறந்துள்ளன, ஒலிகள், வார்த்தைகள், வாக்கியங்கள், பேச்சு – எழுத்து சமன்பாடு, மொழியியல் நெறிகள், மொழி அரசியல், கொச்சை மொழிகள் வழக்கு, வட்டார வழக்குகள், தனி நபர் மொழி வழக்கு, மொழியியல் எனும் துறையின் துவக்கம் – பரிணாமம் – தற்காலப் போக்கு, முக்கியமான துறை வல்லுனர்களும் அவர்களின் பங்களிப்பும், மொழியியலுக்கும் பிற துறைகளுக்குமான உறவாடல், phonetics - phonology – morphology – morphophonemics – syntax – semiotics - semantics உள்ளிட்ட மொழியியல் பிரிவுகள், அமைப்பியல், பின் அமைப்பியல், கட்டுடைத்தல் போன்ற போக்குகள், மானுட மொழியியல், தத்துவ மொழியியல் போன்ற inter-disciplinary அறிவுத் துறைகள் ஆகியவை பற்றி துவக்க நிலை வாசகனுக்கு சுவராஸ்யம் ஏற்படும் வண்ணம் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இவை மட்டுமன்றி, ‘மனிதன் தன் மொழியை எப்படிக் கற்றுக் கொள்கிறான்?’ என்ற தலைப்பிட்ட பகுதி பொதுவாக ஒருவர் அறியாதிருக்கும் பல மொழி சார் செய்திகளை சொல்கிறது.  “குழந்தைகள் ஒரு மொழியின் சிக்கலான, புரிந்து கொள்ளக் கடினமான எல்லா விஷயங்களையும் வியக்கத் தகுந்த வேகத்தோடும் சிரமமில்லாமலும் கற்றுக் கொள்கின்றன” என்கிற சேதி Child is the father of man என்பதை நிறுவுவது மட்டுமன்றி, language acquisition மற்றும் language learning – இரண்டுக்குமான வேற்றுமைகளைப் பற்றியும், முதலாவதானது எந்த காரணங்களால் இரண்டாவதை விட இயற்கையானது, மென்மையானது என்பதையும் சுட்டுகிறது.  தவிர, மொழியியல் துறையின் மிக முக்கியமான ஆளுமைகளான Ferdinand de Saussure, Edward Sapir, Noah Webster, William Wavell, Dwight Whitney, Noam Chomsky, Jacques Derrida, Charles K Ogden, Ivor Armstrong Richards, Charles Sanders Pears, Charles Ferard, France Boas, Benjamin Lee Whorf, Count Alfred Gorsysky, Ludwik Witkenstein, John Rupert Firth, Wilcum van Humbolt போன்றோரின் பங்களிப்புக்களையும் பொருத்தமான இடங்களில் சுட்டிக்காட்டிச் செல்கிறது. 

வாழும் அறிவுஜீவிகளில் தலையானவர் என்று பலரால் கருதப்படும் Jared Diamond அவர்களின் The World Until Yesterday எனும் நூலில் உலக மொழிகளைப் பற்றிய ஒரு தனி அத்தியாயம் காணப்படும்.  மொழிகள் சார்ந்த பல அடிப்படை உண்மைகளை Jared Diamond ஆணித்தரமாக அவ்விடத்து நிறுவிக் காட்டுகிறார்.  ஆனால் துவக்க நிலை வாசகர் அப்பகுதிகளின் உண்மைகளை எளிதில் விளங்கிக் கொள்ளவே இயலாது.  மிகக் கடினமான பயிற்சி அவசியம்.  ஆனால், இந்தப் புத்தகத்தில் Jared Diamond விவாதிக்கின்ற விடயங்களே ஆச்சர்யப்படும் விதத்தில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு சின்னஞ்சிறிய நிலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பில்லாத மொழிகள் அடர்த்தியாக நிலவுவதும், வட அமெரிக்கா போன்ற மிகப்பெரும் நிலப் பகுதியில் வெகு சில மொழிகளுமே வழங்குவது எந்த அறிவியல் பகுப்பாய்விற்கும் அகப்படாதது.    
 
இப்புத்தகம் முழுக்க பல மொழியியல் ஆச்சர்யங்கள் வாசகனுக்கு காத்திருக்கின்றன.  காட்டாக, “ஒலி சார்ந்த நெடுங்கணக்கை [phonetic alphabet] கொண்ட மொழிகள் – தமிழ், ஆங்கிலம் முதலானவை – எழுத்துக்களை ஒலிகளாக முன்னிருத்துகின்றன.  ஆனால், சீன மொழியில் வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும் இடையே ஒலி நிற்பதைக் காண முடியாது.  சீன எழுத்துக்கள் அர்த்தங்களைக் கொடுக்கின்றன.  ஆனால் எழுதியிருப்பதை எப்படி உச்சரிப்பது என்பதை  அவை காண்பிப்பது இல்லை. + அல்லது $ அல்லது % என்ற குறியீடுகளில் அவைகளை எப்படி உச்சரிப்பது என்பதற்கான குறிப்பு இல்லை.  இவற்றை எழுத்துக்களில் plus, dollar, percent என்ற எழுதும் போது அவற்றை உச்சரிப்பதற்கு ஒலிக்குறிப்புக்கள் இருக்கின்றன.  இதைப் புரிந்து கொண்டால், உங்களுக்கு சீன மொழி எப்படி அமைந்திருக்கிறது என்பதும், அது எப்படி ஒலி சார்ந்த நெடுங்கணக்கிலிருந்து  வேறுபட்டிருக்கிறது என்பதும் புரியும்.”  

தமிழ் நாட்டில் உள்ளது போலவே தீவிர மொழி ஆர்வலர்கள் (தயவுசெய்து மொழி வெறியர்கள் என்று படிக்க வேண்டாம்!) கனடாவிலும் இருப்பதைக் கண்டு வியப்பேற்படுகிறது.  “கனடாவில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் முதன்மையாக உள்ள க்யுபெக் என்னும் மாநிலத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க ஓர் ஆணையம் இருக்கிறது.  இதை மொழிக் காப்பாளன் [language police] என்று ஆங்கிலத்தில் பாமர வழக்கில் குறிப்பிடுவார்கள். க்யுபெக் மாநில அரசு பிரெஞ்சு மொழிப் பயன்பாடு பற்றி இயற்றும் (குறுகிய மனப்பான்மை கொண்ட, தவறான வழியில் இட்டுச் செல்லும்) சட்டங்களைச் செயல்படுத்தி பிரெஞ்சு மொழியைப் காப்பாற்றுவது இதனுடைய வேலை.  பொது இடங்களில் பிரெஞ்சு மொழி அல்லாத மற்ற மொழிகளில் அறிவிப்புகள், விளம்பரங்கள் இருந்தால் அவற்றில் உள்ள எழுத்துக்களின் அளவு பிரெஞ்சு மொழி எழுத்துக்களின் அளவில் பாதிதான் இருக்க வேண்டும் என்பது ஒரு சட்டம் (தமிழ்நாட்டிலும் இப்படிப்பட்ட சட்டம் உண்டு).  மாண்ட்ரியாலில் கல்லறைக் கற்கள் தயாரிக்கும் ஒரு கடைக்காரர் ஐம்பது ஆண்டுகளாக வைத்திருந்த அறிவிப்புப் பலகையில் இருந்த ஹீப்ரு எழுத்துக்களைச் சிறியதாக்கும்படி இந்த ஆணையம் வலியுறுத்தியது. மொழிக் காப்பாளன் ஆங்கில மொழியில் மட்டும் எழுதப்பட்ட பொதுவிடக் குறிகளைக் கண்டுபிடித்து நீக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறது.”

அடுத்ததாக உலகப் போர்களின் தசாப்தங்களின் போது, ஐரோப்பாவில் அறிவில் சிறந்தோரின் மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளைப் பெருமளவில் உருவாக்கி எதிர்கால சமூகத்தையே ‘மிகச் சிறந்த’ மனிதர்களால் நிரப்ப திட்டம் தீட்டப்பட்டதாக படித்ததுண்டு.  Eugenics என்ற பெயர் தொடர்பாக கேள்விப்பட்ட செய்தி இது.  இதைப்போலவே, உலகின் பொது மொழியாகவும் சிறந்த மொழியாகவும் ஒன்றை உருவாக்கவும் முயற்சிகள் நடைபெற்றுள்ள என்பது வியப்பானது. “...மொழியியலாளர்கள் அனைத்துலக தொடர்பாடலை எளிதாக்கும் ஆர்வத்தில் செயற்கை மொழிகளைப் பல காலத்திற்கு முன்பே உண்டாக்கத் தொடங்கினர்.  அவற்றுள் எஸ்பெராண்டோ [Esperanto] மொழி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  உலக மக்கள் அனைவரும் ஒரு மொழியில் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற ஒரு பொதுமொழியை உருவாக்கும் ஜனநாயக முயற்சியில் உருவான அது, உலகத்தில் இப்போது பேசப்படும் எல்லாப் பேச்சு மொழிகளிலும் உள்ள அடிப்படைக் கூறுகளை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது.  ஆனால், அனைத்துலக மொழிகள் ஒற்றுமைக்கு இந்த முயற்சி தொடக்கப் புள்ளியாகவும் கூட இருந்ததில்லை.”

நூலின் ஆசிரியர் மொழியியல் சார்ந்து மிகவும் தீவிரமாக விடயங்களைப் பேசிச் செல்வதில்லை.  அவ்வப்போது நகைச்சுவைத் துணுக்குகளையும் தெளித்தவாறே உள்ளார். “ஒரு மத போதகர் ஒரு பழங்குடி சமுதாயத்திற்கு ஒரு நீண்ட உபதேசம் செய்கிறார்.  அவர் சொன்ன  சுவராஸ்யமான கதை கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு நீள்கிறது.  அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் எழுந்து நின்று நான்கு வார்த்தைகள் பேசுகிறார்; கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பேரொலியோடு சிரிக்கிறார்கள்.  மதபோதகருக்கு ஒன்றும் புரியவில்லை.  ‘நான் சொன்ன சிக்கலான கதையை எப்படி நான்கு வார்த்தைகளில் மொழிபெயர்த்தீர்கள்?  இந்த மக்கள் அப்படிப்பட்ட வியத்தகு மொழியையா பேசுகிறார்கள்? நீங்கள் முழுக் கதையையும் எப்படி நான்கு வார்த்தைகளுக்குள் அடக்கிச் சொன்னீர்கள்?’ என்று அவரைக் கேட்கிறார். அதற்கு மொழிபெயர்ப்பாளர் கூறினார்.  ‘கதை மிகவும் நீண்டது.  அதனால் நான் அவர்களிடம் சொன்னேன், ‘மதபோதகர் ஜோக் சொல்கிறார், சிரியுங்கள்’ என்று. 
            
தொடக்க நிலையினருக்கான புத்தகம் என்று ஆசிரியரே அறிவித்து விட்டாலும் கூட, இது பல அரிய புத்தகங்களின் தகவல்களைத் தொகுத்து எளிய மொழியில் தந்திருக்கிற ஒன்று என்றபடிக்கே தீர்மானிக்க முடிகிறது.  மொழி ஆர்வலர் எவருக்குமே இதில் சுவராஸ்யப் படுத்தும், மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.  புத்தகங்களை வாசிக்கும் போது, அடிக்கோடு இடாமல் என்னால் மேலே தொடர முடியாது.  இந்தப் புத்தகத்தை முடித்தவுடன், புரட்டுகிற தருணத்தில் அடிக்கோடிடப் பட்டவைகளில் சிலவற்றை இங்கே மேற்கோளுக்காக தருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

[1] நம் மூளையில் உள்ள எண்ணங்களை நம் வாய் மூலம் வெளியே கொண்டு செல்ல, பின் அவற்றைப் பிறர் மூளைக்கும் கொண்டு வர மொழி ஒரு கருவியாகப் பயன்படுகிறது.
[2] மொழியியல் மொழியால் மொழியை அலசுகிறது.  
[3] மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை [The spirit is willing, but the flesh is weak] என்ற வாக்கியத்தை கணினி ‘பானம் நன்றாக இருந்தது, ஆனால் இறைச்சிதான் மோசமாக இருந்தது [The drink is all right but the meat is lousy] என்று மொழி பெயர்த்தது.  கணினி மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மறுபடி ஆரம்பித்த இடத்திற்கே போக வேண்டியதாயிற்று.
[4] நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போது பெரியவர்கள் நம்மிடம்  பேசும் பேச்சைக் கேட்டு யாரும் எடுத்துச் சொல்லாமலே இலக்கண விதிகள் என்னவென்று படித்துக் கொள்வது நம்முடைய வியத்தகு திறன்.  அந்த விதிகளைக் கொண்டே நாம் புதிய வாக்கியங்களை உருவாக்கி, பெரியவர்களிடம் திரும்பப் பேசி, நாம் பேசுவதை அவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்கிறோம்.
[5] பிராமணர்கள் சாப்பிடும் இடம்;  பிராமணர் கள் சாப்பிடும் இடம்.
[6] உலக மொழிகள் 3000லிருந்து 5000 வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன.
[7] BASIC English என்பதை சார்லஸ் கே ஒக்டன் ஒரு அனைத்துலக துணைமொழியாக உருவாக்கினார்.  850 சொற்களையும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய  விதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு இது.  இது உலக அரங்கில் ஒரு பொது மொழியாகச் செயலாற்றி அது சமாதானத்தை வளர்க்கும் என்று அவர் நம்பினார்.  BASIC என்பது British, American, Scientific, International, Commercial என்னும் வார்த்தைகளின் முதலெழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கிய சொல்.
[8] மொழியியல் எப்பொழுதுமே இளவயதினரை ஈர்க்கும் துறையாக இருந்திருக்கிறது.
[9]  ஆங்கிலத்தில் அதிகபட்ச அர்த்தங்கள் உள்ள சொல்லுக்கு ஓர் உதாரணம் set.  இதற்கு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 128 அர்த்தங்களைக் கொடுக்கிறது.
[10] ஒரு மொழி புழக்கத்தில் இருக்கும் வரை அது மாற்றம் அடைவதைத் தவிர்க்க முடியாது.
[11] கிளைமொழி மாற்றங்கள் பரவும்போது எந்த திசையெடுத்து எப்படிப் பரவும் என்று குறி சொல்வதற்கு எந்த வழியும் இல்லை.  ஆகவே கிளைமொழி வேறுபாடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வரைபடத்தில் காட்டினால் அது மிகவும் சிக்கலான வடிவங்களைக் காட்டும்.  
[12] ஒரு மொழியைப் படிப்பதற்குச் சிறந்த காரணம் என்னவென்றால், அது பிறந்ததிலிருந்து நாம் பேசிய மொழி என்பதைத் தவிர, நம் சிந்தனைப் போக்குகளைத் தோலுரித்துப் பார்க்க உதவும் என்பதுதான்.

[மொழியியல் – தொடக்கநிலையினருக்கு, டெரென்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, உரூபா 160/-]