• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

மனித வரலாற்றின் நீளத்தில் அவ்வப்போது பல அறிவுத் துறைகள் மனிதனின் சௌகர்யத்தையும், புரிதலையும் அதிகரித்தபடியே உள்ளன. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சாதனம் என்றாலும், அது ஒரு அறிவுத் துறையும் கூட.  கடவுளைப் போலவே, மொழியைப் பற்றியும் முழுவதுமாக அறிந்து கொண்டவர் யாருமில்லை.  கார் முன்னே நகர நகர பிடிபடாமல் வேகமாக ஓடும் அதன் முக ஒளிக்கற்றையைப் போலவே, தோண்டத் தோண்ட இதுவரை புரியாத பல விடயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன, மொழியைப் பொறுத்த வரை.
 
மொழியை வரையறுக்க முயற்சித்தது இலக்கணம்.  இப்படித்தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து சமுதாயத்தின் மீது திணிக்க முயன்று தோற்றது இலக்கணம். ஒவ்வொரு விதியும் அதன் prescriptive தன்மை காரணமாகவே தோற்றுப் போனது.  மொழியியல் என்ற அறிவுத் துறை, மொழியின் வரலாற்றில் மிக அண்மையில் உருவானது. இது விதிகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  முற்றிலும் descriptive தன்மை கொண்டது.  “மொழியைப் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுத்துறை” என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொள்ளும் மொழியியல், மொழியை அது எப்படி பேசப் படுகிறதோ அந்த வடிவத்தையே அதிகாரப்பூர்வ ஒன்றாகக் கருதி அதன் தன்மைகளை, வரலாற்றை, பிறவற்றோடான ஒப்பீட்டை மேற்கொள்கிறது.  மேலும், மொழியோடு அறிவியல், தத்துவம், வரலாறு, புவியியல், மானுடவியல், தர்க்கம், அரசியல் உள்ளிட்ட பிற துறைகள் மேற்கொள்ளும் உறவாடலை விவரிக்க முயல்கிறது.  “ஒன்றின் தன்மைகளை அறிந்து கொள்ளல் அதையே அறிதல்” என்பதையே மொழியியல் திரும்பத் திரும்ப பேசுகிறது. 

மொழியியல் ஒரு பிரத்யேகமான அறிவுசார் துறை.  இதைப் பயில வாசிப்பு ரீதியாக பல கட்ட முன்னேற்பாடுகள் அவசியம்.  முறையான அறிமுகமும், கற்பித்தலும் பயில்பவருக்கு இன்றியமையாதது.  மொழியியல் என்ற துறைக்கு தமிழகத்தில் ஒருமித்த வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது.  பல்கலைக் கழக தமிழ்த் துறைகள் மொழியியல் என்னும் அறிவுத் துறையை தமக்கிணையான ஒன்றாகக் கருதியதில்லை.  அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், பின்னர் 1980களின் மத்தியில் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகியவை மட்டுமே மொழியியல் என்ற தனித் துறையைத் தோற்றுவித்தன.  மைசூரில் ‘இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்’ மைய அரசால் துவங்கப் பெற்று மொழியியல் பின்னணியில் இந்திய மொழிகளை ஆய்வுக்குள்ளாக்கி வருகிறது.  ஆனாலும், எண்ணிக்கை அளவில் இவை மிகவும் சொற்பமே.  மொழியியல் துறையில் பட்ட மேற்படிப்பையோ, ஆய்வையோ நடத்தும் மாணவருக்கு வேலைவாய்ப்பும் அரிதாகவே உள்ளது.  தமிழ்த் துறைகளும், ஆங்கிலத் துறைகளும் மொழியியல் துறையை மட்டம் தட்டியே வைத்திருக்கின்றன.  இதில் நிறுவன அரசியலின் பங்கு மிக அதிகம்
. 
தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள வேண்டுமானால், அவருக்கு பிரத்யேகமான ஏற்பாடுகள் தேவையில்லை.  தமிழ் இலக்கிய அறிமுக நூற்கள் ஏராளமாக கிடைக்கின்றன.  மலிவு விலைப் பதிப்பிலும் கூட.  அவருக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்ய நமது சமூகத் தளத்தில் நிறைய விற்பன்னர்கள் முன்வருவர்.  பல்வேறு இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள், பயிலரங்குகள் – இது பொருள் பற்றி – கல்லூரிகளும், சர்வகலா சாலைகளும் நடத்திய வண்ணமே உள்ளன.  ஆங்கில இலக்கியத்தைப் பற்றிய அறிமுகம் வேண்டுபவருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலைமை ஏறக்குறைய இதுதான்.  ஆனால், மொழியியல் பற்றிய ஆர்வம் யாருக்கேனும் உண்டாகுமாயின், அவருக்கு இத்தகைய வசதிகள் தற்சமயம் இங்கு திருப்தியுறும் விதமாக இல்லை. மொழியியலைப் பற்றிய அறிமுக நூற்கள் மிகக் குறைவே.  கிடைக்கின்ற சொற்ப அறிமுக நூற்களும் கூட, சர்வகலா சாலைகளின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டவை.  மருந்துக்கும் கூட சுவராஸ்யம் ஏற்படுத்தாதவை.  இந்தப் புத்தகங்களை வாசிக்க முற்படும் எவரும் மொழியியல் என்பது இன்னும் பெயரிடப்படாத ஒரு கிரகத்தின் அமைப்பியலைப் பற்றியது என எண்ணத் தலைப்படக் கூடும். 

இந்த நிலையில் ‘அடையாளம்’ வெளியீடாக “மொழியியல் – தொடக்க நிலையினருக்கு” என்ற Terence Gordon எழுதிய நூல் தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் மொழிபெயப்பில், மூலத்தில் உள்ள Susan Wilmorth எனும் சைத்ரீகரின் ஓவியங்களைத் தாங்கி அழகுற பதிப்பிக்கப் பெற்றுள்ளது.  முடிந்தவரையில், மொழிபெயர்ப்பு எளிமையாகவே உள்ளது.  சில இடங்களில் வாசகர் கருத்துக்களை உள்வாங்குவதில் சிரமத்தை உணர்வாரானால், அது கருத்தின் தன்மையைப் பொறுத்ததேயொழிய, மொழிபெயர்ப்பின் தரக்குறைவால் அல்ல.  மொழிபெயர்ப்பாளர் பிரசித்தி பெற்ற மொழியியலாளர் ஒருவரின் துணைவியார் என்பது பெரிய அளவில் அவருக்கு உதவியிருக்கக் கூடும். 

 உலகில் மொழிகள் எப்படி பிறந்துள்ளன, ஒலிகள், வார்த்தைகள், வாக்கியங்கள், பேச்சு – எழுத்து சமன்பாடு, மொழியியல் நெறிகள், மொழி அரசியல், கொச்சை மொழிகள் வழக்கு, வட்டார வழக்குகள், தனி நபர் மொழி வழக்கு, மொழியியல் எனும் துறையின் துவக்கம் – பரிணாமம் – தற்காலப் போக்கு, முக்கியமான துறை வல்லுனர்களும் அவர்களின் பங்களிப்பும், மொழியியலுக்கும் பிற துறைகளுக்குமான உறவாடல், phonetics - phonology – morphology – morphophonemics – syntax – semiotics - semantics உள்ளிட்ட மொழியியல் பிரிவுகள், அமைப்பியல், பின் அமைப்பியல், கட்டுடைத்தல் போன்ற போக்குகள், மானுட மொழியியல், தத்துவ மொழியியல் போன்ற inter-disciplinary அறிவுத் துறைகள் ஆகியவை பற்றி துவக்க நிலை வாசகனுக்கு சுவராஸ்யம் ஏற்படும் வண்ணம் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இவை மட்டுமன்றி, ‘மனிதன் தன் மொழியை எப்படிக் கற்றுக் கொள்கிறான்?’ என்ற தலைப்பிட்ட பகுதி பொதுவாக ஒருவர் அறியாதிருக்கும் பல மொழி சார் செய்திகளை சொல்கிறது.  “குழந்தைகள் ஒரு மொழியின் சிக்கலான, புரிந்து கொள்ளக் கடினமான எல்லா விஷயங்களையும் வியக்கத் தகுந்த வேகத்தோடும் சிரமமில்லாமலும் கற்றுக் கொள்கின்றன” என்கிற சேதி Child is the father of man என்பதை நிறுவுவது மட்டுமன்றி, language acquisition மற்றும் language learning – இரண்டுக்குமான வேற்றுமைகளைப் பற்றியும், முதலாவதானது எந்த காரணங்களால் இரண்டாவதை விட இயற்கையானது, மென்மையானது என்பதையும் சுட்டுகிறது.  தவிர, மொழியியல் துறையின் மிக முக்கியமான ஆளுமைகளான Ferdinand de Saussure, Edward Sapir, Noah Webster, William Wavell, Dwight Whitney, Noam Chomsky, Jacques Derrida, Charles K Ogden, Ivor Armstrong Richards, Charles Sanders Pears, Charles Ferard, France Boas, Benjamin Lee Whorf, Count Alfred Gorsysky, Ludwik Witkenstein, John Rupert Firth, Wilcum van Humbolt போன்றோரின் பங்களிப்புக்களையும் பொருத்தமான இடங்களில் சுட்டிக்காட்டிச் செல்கிறது. 

வாழும் அறிவுஜீவிகளில் தலையானவர் என்று பலரால் கருதப்படும் Jared Diamond அவர்களின் The World Until Yesterday எனும் நூலில் உலக மொழிகளைப் பற்றிய ஒரு தனி அத்தியாயம் காணப்படும்.  மொழிகள் சார்ந்த பல அடிப்படை உண்மைகளை Jared Diamond ஆணித்தரமாக அவ்விடத்து நிறுவிக் காட்டுகிறார்.  ஆனால் துவக்க நிலை வாசகர் அப்பகுதிகளின் உண்மைகளை எளிதில் விளங்கிக் கொள்ளவே இயலாது.  மிகக் கடினமான பயிற்சி அவசியம்.  ஆனால், இந்தப் புத்தகத்தில் Jared Diamond விவாதிக்கின்ற விடயங்களே ஆச்சர்யப்படும் விதத்தில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு சின்னஞ்சிறிய நிலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பில்லாத மொழிகள் அடர்த்தியாக நிலவுவதும், வட அமெரிக்கா போன்ற மிகப்பெரும் நிலப் பகுதியில் வெகு சில மொழிகளுமே வழங்குவது எந்த அறிவியல் பகுப்பாய்விற்கும் அகப்படாதது.    
 
இப்புத்தகம் முழுக்க பல மொழியியல் ஆச்சர்யங்கள் வாசகனுக்கு காத்திருக்கின்றன.  காட்டாக, “ஒலி சார்ந்த நெடுங்கணக்கை [phonetic alphabet] கொண்ட மொழிகள் – தமிழ், ஆங்கிலம் முதலானவை – எழுத்துக்களை ஒலிகளாக முன்னிருத்துகின்றன.  ஆனால், சீன மொழியில் வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும் இடையே ஒலி நிற்பதைக் காண முடியாது.  சீன எழுத்துக்கள் அர்த்தங்களைக் கொடுக்கின்றன.  ஆனால் எழுதியிருப்பதை எப்படி உச்சரிப்பது என்பதை  அவை காண்பிப்பது இல்லை. + அல்லது $ அல்லது % என்ற குறியீடுகளில் அவைகளை எப்படி உச்சரிப்பது என்பதற்கான குறிப்பு இல்லை.  இவற்றை எழுத்துக்களில் plus, dollar, percent என்ற எழுதும் போது அவற்றை உச்சரிப்பதற்கு ஒலிக்குறிப்புக்கள் இருக்கின்றன.  இதைப் புரிந்து கொண்டால், உங்களுக்கு சீன மொழி எப்படி அமைந்திருக்கிறது என்பதும், அது எப்படி ஒலி சார்ந்த நெடுங்கணக்கிலிருந்து  வேறுபட்டிருக்கிறது என்பதும் புரியும்.”  

தமிழ் நாட்டில் உள்ளது போலவே தீவிர மொழி ஆர்வலர்கள் (தயவுசெய்து மொழி வெறியர்கள் என்று படிக்க வேண்டாம்!) கனடாவிலும் இருப்பதைக் கண்டு வியப்பேற்படுகிறது.  “கனடாவில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் முதன்மையாக உள்ள க்யுபெக் என்னும் மாநிலத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க ஓர் ஆணையம் இருக்கிறது.  இதை மொழிக் காப்பாளன் [language police] என்று ஆங்கிலத்தில் பாமர வழக்கில் குறிப்பிடுவார்கள். க்யுபெக் மாநில அரசு பிரெஞ்சு மொழிப் பயன்பாடு பற்றி இயற்றும் (குறுகிய மனப்பான்மை கொண்ட, தவறான வழியில் இட்டுச் செல்லும்) சட்டங்களைச் செயல்படுத்தி பிரெஞ்சு மொழியைப் காப்பாற்றுவது இதனுடைய வேலை.  பொது இடங்களில் பிரெஞ்சு மொழி அல்லாத மற்ற மொழிகளில் அறிவிப்புகள், விளம்பரங்கள் இருந்தால் அவற்றில் உள்ள எழுத்துக்களின் அளவு பிரெஞ்சு மொழி எழுத்துக்களின் அளவில் பாதிதான் இருக்க வேண்டும் என்பது ஒரு சட்டம் (தமிழ்நாட்டிலும் இப்படிப்பட்ட சட்டம் உண்டு).  மாண்ட்ரியாலில் கல்லறைக் கற்கள் தயாரிக்கும் ஒரு கடைக்காரர் ஐம்பது ஆண்டுகளாக வைத்திருந்த அறிவிப்புப் பலகையில் இருந்த ஹீப்ரு எழுத்துக்களைச் சிறியதாக்கும்படி இந்த ஆணையம் வலியுறுத்தியது. மொழிக் காப்பாளன் ஆங்கில மொழியில் மட்டும் எழுதப்பட்ட பொதுவிடக் குறிகளைக் கண்டுபிடித்து நீக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறது.”

அடுத்ததாக உலகப் போர்களின் தசாப்தங்களின் போது, ஐரோப்பாவில் அறிவில் சிறந்தோரின் மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளைப் பெருமளவில் உருவாக்கி எதிர்கால சமூகத்தையே ‘மிகச் சிறந்த’ மனிதர்களால் நிரப்ப திட்டம் தீட்டப்பட்டதாக படித்ததுண்டு.  Eugenics என்ற பெயர் தொடர்பாக கேள்விப்பட்ட செய்தி இது.  இதைப்போலவே, உலகின் பொது மொழியாகவும் சிறந்த மொழியாகவும் ஒன்றை உருவாக்கவும் முயற்சிகள் நடைபெற்றுள்ள என்பது வியப்பானது. “...மொழியியலாளர்கள் அனைத்துலக தொடர்பாடலை எளிதாக்கும் ஆர்வத்தில் செயற்கை மொழிகளைப் பல காலத்திற்கு முன்பே உண்டாக்கத் தொடங்கினர்.  அவற்றுள் எஸ்பெராண்டோ [Esperanto] மொழி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  உலக மக்கள் அனைவரும் ஒரு மொழியில் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற ஒரு பொதுமொழியை உருவாக்கும் ஜனநாயக முயற்சியில் உருவான அது, உலகத்தில் இப்போது பேசப்படும் எல்லாப் பேச்சு மொழிகளிலும் உள்ள அடிப்படைக் கூறுகளை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது.  ஆனால், அனைத்துலக மொழிகள் ஒற்றுமைக்கு இந்த முயற்சி தொடக்கப் புள்ளியாகவும் கூட இருந்ததில்லை.”

நூலின் ஆசிரியர் மொழியியல் சார்ந்து மிகவும் தீவிரமாக விடயங்களைப் பேசிச் செல்வதில்லை.  அவ்வப்போது நகைச்சுவைத் துணுக்குகளையும் தெளித்தவாறே உள்ளார். “ஒரு மத போதகர் ஒரு பழங்குடி சமுதாயத்திற்கு ஒரு நீண்ட உபதேசம் செய்கிறார்.  அவர் சொன்ன  சுவராஸ்யமான கதை கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு நீள்கிறது.  அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் எழுந்து நின்று நான்கு வார்த்தைகள் பேசுகிறார்; கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பேரொலியோடு சிரிக்கிறார்கள்.  மதபோதகருக்கு ஒன்றும் புரியவில்லை.  ‘நான் சொன்ன சிக்கலான கதையை எப்படி நான்கு வார்த்தைகளில் மொழிபெயர்த்தீர்கள்?  இந்த மக்கள் அப்படிப்பட்ட வியத்தகு மொழியையா பேசுகிறார்கள்? நீங்கள் முழுக் கதையையும் எப்படி நான்கு வார்த்தைகளுக்குள் அடக்கிச் சொன்னீர்கள்?’ என்று அவரைக் கேட்கிறார். அதற்கு மொழிபெயர்ப்பாளர் கூறினார்.  ‘கதை மிகவும் நீண்டது.  அதனால் நான் அவர்களிடம் சொன்னேன், ‘மதபோதகர் ஜோக் சொல்கிறார், சிரியுங்கள்’ என்று. 
            
தொடக்க நிலையினருக்கான புத்தகம் என்று ஆசிரியரே அறிவித்து விட்டாலும் கூட, இது பல அரிய புத்தகங்களின் தகவல்களைத் தொகுத்து எளிய மொழியில் தந்திருக்கிற ஒன்று என்றபடிக்கே தீர்மானிக்க முடிகிறது.  மொழி ஆர்வலர் எவருக்குமே இதில் சுவராஸ்யப் படுத்தும், மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.  புத்தகங்களை வாசிக்கும் போது, அடிக்கோடு இடாமல் என்னால் மேலே தொடர முடியாது.  இந்தப் புத்தகத்தை முடித்தவுடன், புரட்டுகிற தருணத்தில் அடிக்கோடிடப் பட்டவைகளில் சிலவற்றை இங்கே மேற்கோளுக்காக தருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

[1] நம் மூளையில் உள்ள எண்ணங்களை நம் வாய் மூலம் வெளியே கொண்டு செல்ல, பின் அவற்றைப் பிறர் மூளைக்கும் கொண்டு வர மொழி ஒரு கருவியாகப் பயன்படுகிறது.
[2] மொழியியல் மொழியால் மொழியை அலசுகிறது.  
[3] மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை [The spirit is willing, but the flesh is weak] என்ற வாக்கியத்தை கணினி ‘பானம் நன்றாக இருந்தது, ஆனால் இறைச்சிதான் மோசமாக இருந்தது [The drink is all right but the meat is lousy] என்று மொழி பெயர்த்தது.  கணினி மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மறுபடி ஆரம்பித்த இடத்திற்கே போக வேண்டியதாயிற்று.
[4] நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போது பெரியவர்கள் நம்மிடம்  பேசும் பேச்சைக் கேட்டு யாரும் எடுத்துச் சொல்லாமலே இலக்கண விதிகள் என்னவென்று படித்துக் கொள்வது நம்முடைய வியத்தகு திறன்.  அந்த விதிகளைக் கொண்டே நாம் புதிய வாக்கியங்களை உருவாக்கி, பெரியவர்களிடம் திரும்பப் பேசி, நாம் பேசுவதை அவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்கிறோம்.
[5] பிராமணர்கள் சாப்பிடும் இடம்;  பிராமணர் கள் சாப்பிடும் இடம்.
[6] உலக மொழிகள் 3000லிருந்து 5000 வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன.
[7] BASIC English என்பதை சார்லஸ் கே ஒக்டன் ஒரு அனைத்துலக துணைமொழியாக உருவாக்கினார்.  850 சொற்களையும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய  விதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு இது.  இது உலக அரங்கில் ஒரு பொது மொழியாகச் செயலாற்றி அது சமாதானத்தை வளர்க்கும் என்று அவர் நம்பினார்.  BASIC என்பது British, American, Scientific, International, Commercial என்னும் வார்த்தைகளின் முதலெழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கிய சொல்.
[8] மொழியியல் எப்பொழுதுமே இளவயதினரை ஈர்க்கும் துறையாக இருந்திருக்கிறது.
[9]  ஆங்கிலத்தில் அதிகபட்ச அர்த்தங்கள் உள்ள சொல்லுக்கு ஓர் உதாரணம் set.  இதற்கு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 128 அர்த்தங்களைக் கொடுக்கிறது.
[10] ஒரு மொழி புழக்கத்தில் இருக்கும் வரை அது மாற்றம் அடைவதைத் தவிர்க்க முடியாது.
[11] கிளைமொழி மாற்றங்கள் பரவும்போது எந்த திசையெடுத்து எப்படிப் பரவும் என்று குறி சொல்வதற்கு எந்த வழியும் இல்லை.  ஆகவே கிளைமொழி வேறுபாடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வரைபடத்தில் காட்டினால் அது மிகவும் சிக்கலான வடிவங்களைக் காட்டும்.  
[12] ஒரு மொழியைப் படிப்பதற்குச் சிறந்த காரணம் என்னவென்றால், அது பிறந்ததிலிருந்து நாம் பேசிய மொழி என்பதைத் தவிர, நம் சிந்தனைப் போக்குகளைத் தோலுரித்துப் பார்க்க உதவும் என்பதுதான்.

[மொழியியல் – தொடக்கநிலையினருக்கு, டெரென்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, உரூபா 160/-]

0 Responses so far.

Post a Comment