• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 15-09-2014 அன்று தில்லி பல்கலைக் கழக கல்வியியல் பேராசியரும் முன்னாள் NCERT இயக்குனருமான திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் The Impact of Institutional Decay என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு:

 இந்தியப் பட்டங்களும் அன்னியப் பட்டங்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதி தொடங்கி பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காக சென்று திரும்பி வந்த நிலையில் இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கும் தகுதிசால் கொண்டவராயிருந்த நிலை அடுத்த நூற்றாண்டு வரை கூட தொடர்ந்தது. காந்தியும், நேருவும் இங்கிலாந்திற்கும், அம்பேத்கர் மற்றும் ஜாகிர் ஹுசேன் தங்களுடைய ஆய்வியல் நிறைஞர் பட்டங்களுக்காக ஜெர்மனியும் சென்றனர். இன்றும் கூட திறன்மிகு இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்விக்காக கடல் தாண்டி, பின் எப்போதும் திரும்பி வராத நிலைதான் இருந்து வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டத்திற்கு அவ்வளவு கவர்ச்சியா? அதையும் தாண்டி உயர்ந்த வருமானம் தருகின்ற திருப்தியான கற்றல் அனுபவம் மற்றும் ஆய்வு சாத்தியங்கள் ஆகியவையே அவர்களை இந்தியாவிற்கு வெளியேயே நிலைபெறச் செய்கின்றன. வெளிநாட்டுப் பட்டங்கள் பெறுவதால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் மட்டுமன்றி, அத்தகைய பட்டங்கள் ஒருவருக்கு தரும் அனுபவங்கள் இந்தியப் பல்கலைக் கழகங்கள் தரும் அனுபவங்களை விட பெரிதும் வேறுபட்டு, மேம்பட்டதாய், திருப்தி அளிப்பதாய் இருப்பதே இத்தகைய போக்கிற்கு காரணம்.
காத்திருப்பின் அரசியல்
இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் அனைத்து நிலைகளிலும் நிலவி வந்த இடைவெளி 1980களில் குறுகி வந்தது போல தெரிந்தாலும், அடுத்த தசாப்தத்தில் மிகவும் பெரிதாகிப் போனது. ஏற்கனவே நிலை பெற்றிருந்த கொள்கைகள் புதிய ஆட்சியாளர்களால் உதறப்பட்டு ஒரு புதிய லட்சியம் கையிலெடுக்கப் பட்டது. கனரக தொழிலை பொறுத்த வரை கோட்டா ராஜ்ஜியம் விலகி சுதந்திர மயமான போக்கிற்கு வழி வகுத்தாலும் கல்வி அமைப்பை பொறுத்த வரை பழைய லைசென்ஸ் ராஜ்ஜியமே தொடர்ந்து தனியார் வணிகமயமாக்கலை ஒழுங்கு முறைக்கு உட்படுத்த முனைந்தது. ஆனால், இது படு தோல்வியிலும், மருத்துவம், பொறியியல், ஆசிரியர் தொழிற் பயிற்சி உள்ளிட்ட தொழில் முறை உயர் கல்வியில் ஊழல் பெருகவும் வழி வகுத்தது. 


நிறுவனச் சீரழிவு என்பது ஒட்டு மொத்த தேசத்திற்கே பொதுவானது என்றாலும் சீரழிவின் நுட்பங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. 700 பல்கலைக் கழகங்கள் உள்ள இந்த நாட்டில் ஒன்று கூட சர்வ தேச அளவில் சிறந்தது என்று கொண்டாடப் படவில்லை என்பது வருத்தமான செய்தி. அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, ஜப்பானிய பல்கலைக் கழகங்கள் மட்டுமல்ல, மலேசிய, சீன மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவும் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்ற நிலையில் அத்தகைய பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது ஒரு தேசிய அவமானமாகவே பார்க்கப் பட வேண்டும். ஆனால், அது மட்டுமல்ல செய்தி. நாம் உண்மையிலேயே வருத்தப் படுவது இத்தகைய நிறுவனச் சீரழிவு வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரின் மீது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பற்றியது. தன்னுள் மறைந்திருக்கும் ஒரு அம்பேத்கரையோ, ஒரு ராமனுஜத்தையோ அல்லது ஒரு ஜகதீஷ் சந்திர போசையோ கண்டுபிடித்து வளர்த்தெடுக்க ஒரு இந்திய மாணவனுக்கு ஐரோப்பிய அல்லது அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு மகா அறிஞனாக டாக்டர் பட்டம் முடித்த நிலையில் ஒரு மாணவன் இந்தியாவிற்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் கூட, நாடு திரும்பியவுடன் அவனது முதல் கவலை பல்கலைக் கழக மானியக் குழுவால் வருடம் இரண்டு முறை நடத்தப் படும் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதாகத்தான் இருக்கும். இந்தத் தேர்வு பல புத்தகங்களில் காணப் படுபவைகளை புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்ய ஒருவனை கட்டாயப் படுத்துவதை விட வேறு என்ன செய்கிறது? இந்தத் தேர்வில் ஒருவன் தகுதி பெறுவதுதான் விரிவுரையாளர் / உதவிப் பேராசிரியர் பணிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனையாகும். அப்படியே அறிஞனாக திரும்பி வந்த அந்த மாணவன் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட, இந்திய கல்லூரிகளிலோ உயர் கல்வி நிறுவனங்களிலோ ஒரு உதவி பேராசிரியர் பதவி பெறுவதென்பது அவன் எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சவால். ஒருவேளை அவன் ஒரு தற்காலிக வேலையைப் பெற்று அதற்காக ஒரு மிகக் குறைந்த தொகுப்பூதியம் பெற்று எந்த உரிமையும் கௌரவமும் அற்று வாழ வேண்டிய நிலை வரும். இவர்களுடைய பணி ஒப்பந்தம் ஒவ்வொரு நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புத்தாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதால் தங்களது பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டியதின் காரணமாக அவர்கள் தங்களுடைய கருத்துக்களை பேராசிரியர் சபைகளில் சுதந்திரமாக வெளியிட முடியாது. நிரந்தமாக்கப் பட்ட பணியாளர்களை விட, மிக அதிக அளவிலான பணிச் சுமைகளை இவர்கள் ஏற்க வேண்டி நேர்ந்திருப்பினும், நிறுவனங்களின் நூலகங்களை பயன்படுத்தவோ அல்லது அப்படி அந்த நூலகங்களிலிருந்து சில புத்தகங்களை தங்களுடைய பணியின் காரணமாக கடன் பெற வேண்டிவரின், தங்களால் முடியாத மிகப் பெரிய தொகையை இட்டு வைப்பாக அந்நூலகங்களுக்கு செலுத்த வேண்டியதாகிறது. அசாத்தியமான மனத் துயரம் தரும் இத்தகைய உதவிப் பேராசிரியர் மன நிலை வருடக் கணக்கில் தொடர்வதால் ஒரு நம்பிக்கையான இளைஞன் அதை முற்றிலும் இழந்து எதையுமே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மனப் பிறழ்ச்சி நிலைக்கு ஆளாகிறான். இதை "காத்திருப்பின் அரசியல்" என்று குறிப்பிடும் திரு.கிரக் ஜெப்ரி தனது புத்தகத்தில் இந்தியாவில் படித்தவர் வேலையற்று இருக்கும் நிலை சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்துகின்ற ஒன்று என்று குறிப்பிடுகிறார்.
பறிக்கப்பட்ட கெளரவம்
இத்தகைய பரிதாபமான நிலையில் கல்லூரிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் பணி புரியும் உதவிப் பேராசிரியர்கள் "தற்காலிக, குறிப்பிட்ட கால, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் கௌரவ" என்ற நிலைகளில் பணிபுரிகின்றனர். தங்களது பணி நிரந்தமாக்கப் படுவதை அவர்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட, பெரிய அளவில் பணியமர்த்துதல் என்பது இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் அண்மைக் காலத்தில் நடைபெறவே இல்லை. ஒரு இந்தியப் பல்கலைக் கழகத்தில் நிரந்தர பணி பெறுவது என்பது மிகவும் சிக்கலான சில காரிய காரணிகளை உள்ளடக்கியதாகும். அந்த விண்ணப்பதாரருக்கு அரசியல் சக்தி கொண்டோர் ஆதரவளித்தல், சமூக சக்திகளின் தொடர்பு, நல்ல பொருளாதார பின்புலம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவைகளை பொறுத்த விடயம் இது. மட்டுமன்றி, பல்கலைக் கழக மானியக் குழு வேறு சில தரப் புள்ளிகளை வற்புறுத்துகிறது. உங்களுடைய ஆய்வுக் கட்டுரை சர்வ தேச தரத்திலான ஆய்வு இதழ்களில் பதிப்பிக்கப் பட்டிருப்பினும் சரி, அல்லது யாருமே அறியாத சிறிதும் தரமற்ற புனைவான ஆய்வு இதழ்களில் வெளியிடப் பட்டதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஒரே விதமான தரப் புள்ளிகள்தான். இதே அளவுகோல்தான் "ஆய்வரங்கங்களில் பங்கெடுத்தல்" என்பதிலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தகைய பணியமர்த்தல்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்றல் என்பதைப் பற்றிய கூச்சல்களும், கூப்பாடுகளும் இரைந்திருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப் படுவதும் பணியமர்த்தப் படுவதும் லௌகீகமான விடயங்கள் சம்பந்தப் பட்டது. இத்தகைய நேர்வுகளில் நீதிமன்றங்கள் அடிக்கடி அணுகப்பட்டு, தடையாணைகள் பெறப்படுவதும் வாடிக்கையான நிகழ்வுகள். கௌரவமிக்க இத்தகைய பணி நிலைகளுக்கு பணியமர்த்தப் படுவதிலும், தேர்ந்தெடுக்கப் படுவதிலும் நிறைந்துள்ள தொந்தரவுகள், தாமதங்கள் ஆயிரக்கணக்கான நமது இளைஞர்களின் எதிர்கால வாழ்வையே குலைத்துப் போடுகின்றன. தனி மனிதர்கள் மட்டுமன்றி நூற்றுக் கணக்கில் பல்கலைக் கழகங்களும், ஆயிரக் கணக்கில் கல்லூரிகளும் இத்தகைய போக்குகளால் முற்றிலும் சிதிலமடைந்து விட்டன.
 ஆட்குறைப்பு போக்கு
உயர் கல்வி நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் நிரந்தர பணியாளர்களை ஆட்குறைப்பு செய்கின்ற போக்கு 1990களின் ஆரம்ப வருடங்களில் துவங்கின. இதற்கு பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுவது பொருளாதார சீர்திருத்தங்கள். ஐந்தாவது சம்பளக் குழு பணியிடங்களை பெருவாரியாக குறைத்திடல் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக பிரகடனம் செய்ததற்கு வெகுகாலம் முன்னமேயே பல மாநிலங்களில் ஆசிரிய பணியிடங்களை நிரப்புவது என்பது முற்றாக நிறுத்தப்பட்டோ அல்லது சூறாவளி மாற்றங்களுக்கோ உள்ளாகியது. இத்தகைய போக்கிற்கு ஈடு கட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவதும், ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை வெகுவாக குறைப்பதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வழிகளாக கருதப்பட்டது. குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பற்ற ஆசிரியர்கள் பெருமளவு நியமிக்கப் பட்டது எதிரெதிர் அரசியல் கட்சிகளுக்கும் பல்கலைக்கழக சங்கத் தலைவர்களுக்கும் பெரிய சௌகர்யத்தை அளித்தது. வட இந்தியாவில் இத்தகைய இரண்டு போக்குகளும் பெருமளவு காணப் பட்டன. 1993ம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி விரிவுரையாளர்களே நியமிக்கப் படவில்லை. பல புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப் பட்டாலும் கூட, அவைகள் தற்காலிக பணி நிலை ஆசிரியர்களாலேயே நடத்தப் பட்டு வந்தன. உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இப்போக்கை பின் தொடர்ந்தன. மூன்றாண்டு பட்டப் படிப்பை நான்காவது ஆண்டுக்கு நீட்டித்தும், நிரந்தரப் பணியமர்த்தல்களுக்கு தடை விதித்தும் இரண்டு முரண்பட்ட காரியங்களை ஒரே நேரத்தில் தில்லி பல்கலைக் கழகம் சாதித்துக் காட்டியது. தில்லியில் மட்டும் 4000-க்கும் மேற்பட்ட தற்காலிக பணி நிலை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். பள்ளி அளவில் கூட தில்லியில் தற்சமயம் 20,000க்கும் மேலான தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆனால், ஆசிரியர் பணி நிலையை கேவலப் படுத்துவதில் மத்தியப் பிரதேசம் மற்ற எல்லா மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டது. 1990ம் ஆண்டிற்கு முன்பு பணியமர்த்தப் பட்ட ஆசிரியர்கள் அனைவரும் "அருகி வரும் பணிநிலை" என்று அறிவிக்கப்பட்டு, மிக சொற்ப சம்பளம் பெறும் தொகுப்பூதிய ஆசிரியர்களை அனைத்து நிலைகளிலும் அம்மாநில அரசு நிரப்பியிருக்கிறது. அரசியல் மாற்றங்கள் இத்தகைய பரிதாபமான நிலையை மாற்றும் என்ற நம்பிக்கை துவக்கத்தில் தெரிந்தாலும் நாளடைவில் அது முற்றிலும் அற்றுப் போய் விட்டது. அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு பெயர் போன மத்தியப் பிரதேசம் தற்போது கற்பழிப்பு வழக்குகளுக்கு தேசத்திலேயே முன்னோடியான தகுதியைப் பெற்றிருப்பது காலத்தின் கொடுமை.
பண்பாட்டு பெருமை
கல்வி பண்பாட்டு பெருமையைக் குறிக்கிறது. இத்தகைய பண்பாட்டு பெருமை எண்ணங்களை பரிவர்த்தனை செய்து கொள்வதிலே வளர்ந்து வந்த பாரம்பரியம், வாசிக்கும் பழக்கம் மற்றும் பல்வேறு படைப்பூக்க செயற்பாடுகளை உள்ளடக்கியது. இத்தகையதோர் பண்பாட்டு தொன்மைக்கு திருப்தியான, மகிழ்ச்சி கரமான ஆசிரியர்கள் இன்றியமையாதவர்கள். ஆசிரியர்களை கேவலப்படுத்துவதின் மூலம் தனது பண்பாட்டு பெருமையை இந்தியா சிதறடித்து விட்டது. நூலகங்கள் சீரழிந்ததிலும் இதற்கு பெரும் பங்கு உண்டு. நமது பள்ளிகளில் பெரும்பாலானவை நூலகங்களை கொண்டிருக்கவில்லை என்றாலும் பல கல்லூரிகளில் பெருமைமிக்க நூலகங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மதிப்பீட்டு ஆய்வின் போது அலகாபாத் எவின் கிறிஸ்டியன் கல்லூரிக்கு சென்ற நான் சீரழிந்து நின்ற அதன் நூலகத்தை கண்டு திகிலுற்றேன். அதன் பழைய பொக்கிஷங்கள் அறைகளில் வைத்து பூட்டப் பட்டுவிட்டன. பாடப் பகுதிகளின் விளக்க உரை புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் அணுக முடிந்ததாக இருந்தன. பொது நூலகங்களுக்கும் இதே கதிதான். 
 பாதிக்கும் மேலான நிரந்தரப் பணியாளர் இடங்கள் காலியாக கிடப்பதால் பழம் பெருமை வாய்ந்த தில்லி பொது நூலகமும் தனது புகழை இழந்து நிற்கிறது. இந்தியப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் நூலகங்களுக்கு அளித்து வந்த முன்னுரிமையை தொடர தவறி விட்டன. எந்தவித தொலை நோக்கும் இல்லாத அதிரடி அதிகாரிகள் நூலகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இணையம் சார் அறிவு சேகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டனர். இத்தகைய அறிவு வளங்கள் இன்றியமையாதவை என்றாலும், ஒரு நூலகம் தன்னகத்தே கொண்டிருக்கும் அறிவு சார் தொன்மையை எப்பொழுதும் இவை எட்டிப் பிடிக்க முடியாது. கல்வியில் நம்மை முந்தி நிற்கும் சமூகங்களை நோக்கும்பொழுது, அவை நூலகங்களுக்கு தம் அமைப்பில் வழங்கியிருக்கும் சிறப்பான இடமும் அறிவு சார் சமூகம் ஒன்றில் தம் குழந்தைகளை கொண்டு சேர்க்கும் ஆர்வமும் புலப்படும். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நடுவண் அரசு இந்த நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்த முன்வருமானால், அது முதலில் செய்ய வேண்டியது நிறுவனங்களை மீட்டெடுப்பதாகும். இதைச் செய்த பிறகு மற்ற எந்த சீர்திருத்தமும் செய்து கொள்ளலாம். கிண்டர்கார்டென் தொடங்கி அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பது பல்கலைக் கழகங்களும் பட்டக் கல்லூரிகளும்தான். வேலைக்கு ஆள் அமர்த்தாமை என்பது ஒரு கலாச்சாரமாகவே இன்று பரவி விட்டது. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் அவைகளின் திறன் பெரிதும் மங்கி விட்டது. வசதி மிக்க தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்றவைகளிலும் கூட வர்த்தகம் மற்றும் அரசியல் குறுக்கீடுகள் கல்வியின் தரத்தை மிகவும் சேதப்படுத்தியிருக்கின்றன. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் விடுவதிலும் அல்லது அவைகளை குறைந்த சம்பளம் கொண்டு தற்காலிகமாக நிரப்புவதிலும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை ஒழித்துக் கட்டுவதிலும் அரசின் பணம் மிச்சப்ப்படுமானால், இத்தகையதோர் சேமிப்பிற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுத்தேயாக வேண்டும். இப்படியான சேமிப்பால் இந்தியா பெற்றதுதான் என்ன? குழந்தைகளுக்கான சேவை என்பதிலே சிறிது திறன் கொண்டிருந்த அமைப்பு ஒன்றினையும் இந்த சிக்கன நடவடிக்கை முற்றிலும் சிதைத்து விட்டது. 


யாரின் பெயரால் ஆசிரியர் தினத்தை நாம் கொண்டாடுகிறோமோ அவர் - டாக்டர் ராதாகிருஷ்ணன் - இன்று உயிரோடு இருப்பாரேயானால் இந்த தேசம் ஆசிரியர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை கண்டுணர்ந்து மிகவும் குழம்பியிருப்பார் என்பது நிச்சயம்.

at 12:50 AM Posted by Prabhu 0 Comments

மனிதன் மட்டும்தான் பேசுகிறான்.  வேறு எந்த ஜந்துவிற்கும் இந்தத் திராணி இல்லை.  பேசுவதற்கு தனது கூட்டத்திற்குள்ளேயே ஒலிக் குறியீடு ஒன்றை பொதுவாகத் தீர்மானித்துக் கொண்டதின் பின், கால ஓட்டம் மொழியைக் கொண்டு வந்தது. அறிவிற்கான துறைகளையும் மனதிற்கான துறைகளையும் வளர்த்துக் கொண்ட மனித ஜாதி, இவைகளின் வழியே தனது கனவுகளுக்கு நிஜ வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டுமன்றி, தான் சார்ந்த சமூகத்தோடு உறவாடுவதில் விளையும் இன்ப துன்பங்கள், சிக்கல்கள், தீர்வுகள் போன்றவற்றையும் பிரதியாக்குவத்தின் மூலம் தீர்த்துப்போட முயன்றது.  இலக்கியம், இசை போன்ற நுண்கலைகள் இப்படித்தான் பிறந்திருக்க வேண்டும். 
 
பிறந்த ஒன்றுக்கு வரலாறு உண்டு.  ஜாதகம் உண்டா? பிறந்த கணம் ஜென்மத்தின் தன்மைகளை மாற்றி விட முடியுமா?  இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை ஜாதகத்தை எழுதுவது யார்?  படைப்புக் கர்த்தாவா, விமர்சனக்காரனா? படைப்பாளியின் தொடர் ஆக்கங்களில் அவனது படைப்புலகையும் அதன் சாரத்தையும் அறிந்து கொள்ள முடியுமா?  படைப்பாளி என்பவன் மரபின் தொடர்ச்சியா?  அல்லது நெடிய மரபொன்றின் புதிய மீறலா?  படைப்பாளி இலக்கியத்தோடு மட்டும் எப்பொழுதும் சம்பந்தப்பட்டவனாக இருக்கிறானா?  வேறு அறிவுத் துறைகள் அவனது படைப்பாக்கத்தின் மீது செலுத்தும் ஆளுமையின் விளைவு படைப்பை எவ்விதம் பாதிக்கிறது?  படைப்பு எழுத்தாளனின் வெளிப்படுத்தலா அல்லது தப்பித்தலா? ஒன்றின் கர்த்தாவானவன் தனியனா அல்லது சுற்றியிருக்கும் அறிவுலகின் குழந்தையா?  இவன் சமூகத்தைப் பாதிப்பதும் சமூகன் இவனைப் பாதிப்பதும் படைப்பில் புலனாகிறதா?  இவனது எழுத்து எதோ ஒரு ‘இசம்’ சம்பந்தப்பட்டதா அல்லது எந்த ஒரு அறிவியக்கத்தைப் பற்றியும் பிரக்ஞையோ கவலையோ இல்லாது “உள்ளே நிகழும் அசௌகர்யத்தால்” பீறீட்டவையா? ஒரு படைப்பாளிக்கு அவனது மொழியின் இலக்கிய மரபும் உலக இலக்கிய மரபும் பலவீனமா, சௌகர்யமா?  செவ்வியல் இலக்கியப் பிரதிகளில் வரும் “உதாரண” மாந்தர்களை இவன் தனது படைப்பில் புத்துயிராக்கம் செய்வது மரபா, தவிர்க்க முடியாத கட்டாயமா?  கலைஞன் ஒருவன் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா?  ஊனத்தை நிராகரிக்க எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருப்பதுதான் ஒரே மாற்றா?  செவ்வியல் பிரதிகள் மையப்படுத்தும் அறம் நவீன கதையாடல்களில் தன்னை எவ்விதம் வெளிப்படுத்திக் கொள்கிறது?  காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறிக் கொள்வது அறமா?  காவியங்களின் பொதுத் தன்மை, எம்மொழியில் காவியப் பிரதி இருப்பினும், இந்த ‘அறம்’ எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியதுதானா?  காலத்தை வென்று நிற்பதால் மட்டுமே ஒரு இலக்கியப் பிரதிக்கு ‘செவ்வியல்’ தன்மை வந்துவிடுகிறதா? 

படைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் வாசிப்பு-வாசகன் ஆகிய கூறுகளின் பங்கு என்ன?  படைப்பு வாசகனிடம் முடிகிறதா, பிறக்கிறதா? படைப்பாளியின் படைப்பு மனம் படைப்போடு அது முடிந்த நிலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதா?  எது அவனது படைப்புலகின் சாரத்தை முடிவு செய்கிறது?  படைப்பாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான – பல நேரங்களில் ஒருவருக்கொருவர் எதிரெதிரான – படைப்புச் சூட்சுமங்களைத் தாங்கி நிற்பதற்கு எது காரணம்?  படைப்பின் ரகசியத்தை அறிவியலால் புரிந்து கொள்ளவே முடியாதா?  உள்மனதின் பரிமாணங்களை படைப்பாக வெளிப்படுத்தும் கலைமனதின் கட்டுமானத்தைத் தீர்மானிப்பது கலைஞன் பெரும் புறவயமான அனுபவங்கள் மட்டும்தானா?  எழுச்சிமிகு எழுத்துக்கள், தட்டையான எழுத்துக்கள், பூடகமானவை, மேலதிக அறிவுசார்பானவை, எளிமையான கிராம மக்களின் அன்றாட வாழ்வை அதே சுவாராஸ்யங்களோடு பிரதியில் கொண்டு வரும் படைப்பு மனம், மர்மமான எழுத்து, இன்னும் என்னன்னவோ மாதிரியான எழுத்துக்கள் – இவை எல்லாவற்றுக்கும் ஊற்று ஒன்றுதானா?

விமர்சனக்காரர்களின் தீர்ப்புரைகள் தவிர, படைப்பைப் பற்றி படைத்தவன் சொல்ல ஏதேனும் உள்ளதா? குறைந்தபட்சம், தனது படைப்புலகம் எதைவேண்டி தன்னால் ஒரு கால நீச்சியில் கட்டப்பட்டு வருகிறது என்பதை கலைஞன் அறிந்துள்ளானா? படைப்பனுபவம் அவனுக்குத் தருவது என்ன?  எழுதுவது அவன் திட்டமிடுதலின் விளைவா அல்லது உணரும் அவஸ்தையின் வெளிப்பாடா?  படைப்பாளி ஏன் எழுதுகிறான்?  அறிவியக்கங்கள் அவனது படைப்பு மீது செலுத்தும் அதிகாரத்தை எந்த அளவு வரை அனுமதிக்கிறான்?
இதைப் போன்ற இன்னும் நூறு வினாக்களுக்கு ஜெயமோகன், சூத்ரதாரி, வேதசகாயகுமார் ஆகியோர் சேர்ந்து, பனிரெண்டு குறிப்பிடத்தக்க தென்னிந்திய இலக்கிய ஆளுமைகளிடம் பெற்றிருக்கும் நேர்காணல்களின் தொகுப்பான “இலக்கிய உரையாடல்கள்” பதில் தர முயற்சிக்கிறது.    பதில் தர முயற்சிக்கிறது என்பதை விடவும், இவை பற்றியெல்லாம் உரக்கப் பேசுகிறது, அப்படிப் பேசுவதின் மூலம் பொதுவெளியில் இதைப் பற்றி அக்கறை கொண்டோர் சிந்திக்கவும் விவாதிக்கவும் அரிய கருப்பொருட்களை அனுமதிக்கிறது எனலாம்.  படைப்பாளி ஒருவன் தன்னுடைய எல்லாவற்றையும் படைப்பில் கொண்டுவர முடிவதில்லை.  எவ்வளவு சொல்லியும், விடுபட்டவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.  படைப்பாளியை விட, அந்த விடுபட்டவைகளை வாசகன் எளிதில் இனம் கண்டு கொள்கிறான்.  அவைகளைப் பற்றிய அர்த்தம் நிறைந்த சம்பாஷனை ஒன்றைத் துவக்கும் வாசகனோடு கலந்துகொண்டு, மிகுதியான விளக்கங்களை அளிப்பதின் மூலம் தனது படைப்பு மனதில் சொல்லாமல் நின்றவைகளை படைப்பாளியால் முன்னிலைப்படுத்த முடிகிறது.
 

படைப்பு, படைப்பனுபவம், வாசிப்பு, வாசிப்புலகம் ஆகியவை இத்தகைய சம்பாஷனைகள் மூலம் தங்களது மர்மங்களைத் தாங்களே விளங்கிக் கொள்ள முயல்வதுடன், இவ்வுலகில் தங்களுடைய தவிர்க்கவொண்ணா இருப்பையும் தரப்பினையும் உணர்த்துகின்றன. 
 

நித்யசைதன்ய யதி, கே.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ், பேராசிரியர் ஜேசுதாசன், நா.மம்மது, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நீல பத்மநாபன், அ.முத்துலிங்கம், பாவண்ணன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்ட பெரும் ஆளுமைகள்.

விஷய கனமான புத்தகம்.  தொடர்ந்து படிப்பதைவிட, கேள்வி கேள்வியாக படித்து, வினா-விடை இரண்டின் உட்கிடக்கைகளையும் புரிதலுற்றபின், முன் நகர்வது இந்நூலுக்கான வாசிப்பு முறையாகும்.  இதைப் போன்ற விவாதங்கள் ஏராளமாக தொடர்ந்து நடைபெறுவதற்கான தேவையும் நியாயமும் இன்றைய தமிழ் நவீன இலக்கியச் சூழலில் உள்ளது. 
 

[என் இந்தியன் பதிப்பகம், சென்னை, திசம்பர் 2006, உரூபா 150/-]   

.



தஞ்சை பிரகாஷ் அவர்களைப் பற்றி நா.விச்வநாதன் அவர்கள் எழுதியிருக்கும் நினைவுக் குறிப்பு அண்மையில் தமிழ் தி ஹிந்துவில் வந்துள்ளது.  தஞ்சை பிரகாஷ் அவர்கள் கா.நா.சுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  பெரிய கலா ரசிகர்.  ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.  எனினும், இவரைப் பற்றி எழுதப் பட்ட சித்திரங்கள் குறைவு.  நேரடியாக பழக்கமில்லாத எவருக்கும் இந்த ஆளுமையைப் பற்றி எழுதப்பட்டதின் மூலம் அதிகம் தெரிய வழியில்லை என்ற நிலையில் நா.விச்வநாதனின் இந்தக் கட்டுரை பயனுள்ளது.  படைப்பாளிக்கும் படைப்புக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கத் தேவையில்லை என்பதை நம்பி வந்தாலும் கூட, எழுத்து ஒருவனின் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது அல்லது ஜீவனான எழுத்துக்கும் அது எழுதப் படுகிற சமயத்தில் அதை நம்புவனாக எழுத்துக்காரன் இருந்தான் என்பதையும் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. 

தஞ்சை பிரகாஷ் அவர்களிடம் ஜீனியஸ் ஒருவனிடம் இருந்தாக வேண்டிய எடுத்துக்காட்டான தன்மைகள் இருந்திருப்பதை விச்வநாதன் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. இரண்டு அரசு வேலைகள் - மத்திய மற்றும் மாநில - இவரை ஒரு இடத்தில் இருத்தி வைக்க முடியவில்லை.  வாழ்நாள் முழுவதும் நகர்ந்து கொண்டே இருந்திருப்பினும் சொந்த ஊர் -  ஆறு திரும்பி திரும்பி இவரை தங்களிடம் இழுத்தபடியே இருந்திருக்கின்றன.  சில்லறை தொழில்கள் பலவற்றை செய்துகொண்டே இருந்திருக்கிறார்.  எதுவும் பெரிய அளவில் உருப்படவில்லை. அதற்காக கவலைப்படவும் இல்லை.  மகாப்பெரிய பேச்சுக்காரராக இருந்திருப்பது தெரிகிறது.  எழுதியதை விடவும் பேசியது அதிகம் - அதில் எழுத்தை விட தரமும் அதிகம் என்றும் விச்வநாதன் தெரிவிக்கிறார்.  இதுவெல்லாமே, ஜீனியஸ் ஒருவனின் classical qualities. 

கிருத்துவம் தெரிந்த கிருத்துவர் என்று தெரிவிக்கும் விச்வநாதன், மதம் சம்பந்தமாக என்றுமே அலட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றும் கோடி காட்டுகிறார்.   தன்னுடைய எழுத்தைப் பற்றியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  அன்றைய நிலையில், எழுத்துக்காரர்களில் பெரும்பாலோர் கா.நா.சுவின் பட்டியலில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்தபோது, அவரின் நெருங்கிய நண்பரான தஞ்சை பிரகாஷ் அவர்கள் அப்படிப்பட்ட எந்தத் துடிப்பும் பெற்றிருக்கவில்லை என்பதும், நண்பர் என்ற காரணத்தினால் பிரகாஷ் அவர்களுக்கு தன்னுடைய பட்டியலில் கா.நா.சு. அவர்கள் இடம் கொடுத்துவிடவில்லை என்பதும் அறிவதற்கு சிறப்பாக உள்ளது.  இரண்டு பேருமே பெரிய மனிதர்கள் என்பதால் இது மாதிரி நடந்திருக்கலாம். 

எனக்கு எப்பொழுதுமே தோன்றுவதுண்டு.  நிறைய எழுத்துக்காரர்கள் இருக்கிறார்கள்.  பெரிய ரசிக மணிகள்தான் அரிதாக இருக்கிறார்கள்.  படிப்பவர்களை விட எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகம். எழுதுபவர்களில் நிறைய பேர் எழுத்துக் காரியத்தை நிறுத்திவிட்டு, படிக்க ஆரம்பித்தால் நல்ல எழுத்துக்கள் புதிதாக தோன்றும்.  படிக்கும் போதும் இலக்கியம் உருவாகிறது.   எழுத்து நுகருபவனின் முனையில் ஒன்றாகவும், தோற்றுவிப்பவன் முனையில் வேறொன்றாகவும்தான்  எப்பொழுதும் உள்ளது.  கேள்வியே இல்லை, படிப்பவன் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்கும் போதே, படைக்கவும் செய்கிறான்.

அப்படிப் பார்த்தால், தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் படைத்தது உலகளவு! 

ஷேக்ஸ்பியர் பிறந்தாரா?
ஷேக்ஸ்பியர் என்ற மனிதர், அவர் வாழ்வைப் பற்றி கிடைக்கிற சித்திரம் எல்லாமே சந்தேகத்திற்கிடமானதே. இன்னும் சிலர், இவர்தான் இவர் பெயரில் கிடைக்கும் நாடகங்களை எழுதியவரா என்று தீவிரமாக சந்தேகிக்கின்றனர். முற்றிலும் உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி, வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் 1564-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஸ்ட்ராட்ஃபோர்ட் என்ற இடத்தில் ஜனித்தார். இவருடைய தந்தை ஒரு வியாபாரி. தாய் மேரி ஒரு விவசாயக் குடும்பத்துக்காரி.

ஒரு குடும்பம் ஒரு கதை
இவரைப் பற்றிய சுவராஸ்யம் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது. தனக்கு 18 வயதே நிரம்பிய நிலையில், 1582-ம் ஆண்டு, தன்னை விட எட்டு வயது மூத்த ஆன் ஹாத்வே என்ற பெண்ணை மணக்கிறார். மூன்று மகவுகள். அதில், இரண்டு பெண்கள், ஒன்று ஆண். முதல் மகள் சூசன்னா. ஒரே மகனான ஹாம்னெட் பதினோரு வயதான போது இறந்துபோனதாக பதிவு உண்டு.

ஷேக்ஸ்பியர் இருந்தாரா?
திருமணத்திற்கு பிறகான இவரது வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் தெளிவாக இல்லை. ஆனால், லண்டனுக்கு குடியேறியிருக்கலாம், அங்கே நாடகங்கள் எழுதத் துவங்கியிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. லண்டனில் இருந்த காலத்தில் இவர் தனியாக இருந்தார் என்ற பதிவுகள் நிரம்ப இருக்கின்றன. குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கிறார். லண்டனில் இருந்த அனைத்து நாடக அரங்குகளும் மூடப்பட்டிருக்கும் Lent நாட்களில் இவர் வீட்டிற்கு சென்று வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவருடைய காதல் பாட்டுக்கள் [sonnets] 1590 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். இவருடைய படைப்பாக்க காலத்தை நோக்குங்கால், ஒரு சமயத்தில் தீவிரமாக எழுதித் தள்ளியிருக்கிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத எழுத்து. ஒரு படைப்பாளிக்கு பொதுவாக லௌகீக குணாம்சம் இராது. இவர் விதிவிலக்கானவர். நாடகங்கள் மூலமாக தான் பெற்ற செல்வத்தை சாதுர்யமாக லாபம் கொடுக்கும் முதலீடுகளில் இட்டுவைத்திருக்கிறார். இந்த மாதிரி விடயங்களில் யாரோ இவருக்கு உதவியிருக்கலாம். நமது சிவாஜி கணேசனுக்கு அவர் தம்பி ஷண்முகம் இருந்ததைப் போல. கி.பி.1605 வாக்கில் ஸ்ட்ராட்ஃபோர்ட் கிராமத்திற்கு அருகே இவர் வாங்கிய நிலபுலன்கள் விரைவிலேயே இரண்டு மடங்கு லாபம் கொடுத்ததாக செய்திகள் உண்டு.

ஷேக்ஸ்பியர் படைத்தாரா?
இவரின் சமகாலத்தியவர்களில் சிலர் ஒக்ஸ்போர்ட் சர்வகலா சாலையைச் சேர்ந்தவர்கள். பொறாமையா, உண்மையா தெரியாது. ஷேக்ஸ்பியர் எந்த நாடகங்களையும் எழுதவில்லை, உண்மையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த Edward de Vere என்பார்தான் எழுதினார் என்று அடித்துச் சொன்னார்கள். ஷேக்ஸ்பியர் ஒரு வணிகர் மட்டுமே என்று நிறுவ முயற்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால், Ben Johnson மற்றும் Robert Greene போன்ற பெரும் இலக்கிய ஆளுமைகள் தங்களது விமர்சனங்களில் ஷேக்ஸ்பியரை திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.

ஷேக்ஸ்பியர் படைப்புலகத்தில் கவிதைக்கு என்ன இடம்?
150 கவிதைகள். sonnet வகையைச் சார்ந்தவை. பெரும்பாலும் காதல் கவிதைகள். அதிலே பல கவிதைகள் காலத்தை வென்று விட்டன என்ற மிக எளிதாகச் சொல்லலாம். கவிதைகளிலே குறிப்பிடப்படும் அந்தப் பெண் யார் என்பது பற்றி தனியாக ஒரு பெரிய விமர்சனக் குழு சில நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. அது ஒரு பெண்ணைப் பற்றியல்ல; ஷேக்ஸ்பியர் ஓரினச் சேர்க்கையாளர். அவர் கவிதைகளில் ஏக்கமாக குறிப்பிடுவது அந்த ஆண் நண்பரைத்தான் என்ற இரைச்சலும் ஷேக்ஸ்பியரைப் பற்றி படிக்கையில் கேட்டாக வேண்டும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
ஆங்கில மொழி மட்டுமல்லாது, உலகத்தின் எந்த மொழியிலும் அதிகம் பார்க்கப் பட்டதும், படிக்கப் பட்டதும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்தான் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம். உலகத்தின் பெரும்பாலான மொழிகளில் இவைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் சமகாலத்தவரோடு ஒப்பு நோக்கையில், இவர் பல்திறம் கொண்டவர். இன்பியல், துன்பியல் மற்றும் வரலாற்று நாடகங்களை ஒரே மாதிரியான நேர்த்தியில் எழுதியிருக்கிறார். இந்த versatility மற்றவரிடம் பார்க்கக் கூடுவதில்லை. ஜனரஞ்சகமும், செவ்வியல் தன்மையும் ஒரே நேரத்தில் இவரால் சாதிக்க முடிந்தவை. இயக்குனர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சேர்ந்த கலவைத் தன்மையை ஒரு இயக்குனர் ஒரே நேரத்தில் சாதிக்க முடிந்தால், அப்படிப்பட்ட ஒருவரை நாம் பார்த்து, வரலாற்றில் பின் நகர்ந்து ஷேக்ஸ்பியரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஷேக்ஸ்பியர் இறந்தாரா?
ஷேக்ஸ்பியர் 1616-ம் ஆண்டு தனது 52 வயதில் மரித்தார். எதனால் இறந்தார் என்பது பற்றி சர்ச்சைகள் நிறைய உண்டு. குடிகாரனாக மாறிப்போன ஷேக்ஸ்பியர் மிதமிஞ்சி குடித்து குழிக்குப் போனார் என்ற செய்தியும் காற்றில் மிதக்கிறது.

இந்த செய்தியைப் போலவே, அவரின் ஆயிரமாயிரம் வரிகள் காற்றில் மிதந்து, துன்பம் நேர்ந்தவர்களுக்கு யாழெடுத்து இன்பம் சேர்த்துக் கொண்டேயிருக்கின்றன. இவரைக் காப்பியடித்து, எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நாடகங்களும், கதைகளும், சினிமாக்களும் தங்கள் கைகளிலும் யாழ் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு இன்பம் சேர்க்க முயன்று கொண்டிருப்பது இவருக்கு பெருமையே.


திரும்பிப் பார்க்கையிலே எப்பொழுதுமே ஒரு திருப்தி.  நடந்தது நல்லதோ இல்லையோ, அவையெல்லாம் முடிந்துவிட்ட சங்கதிகள். முடிந்துவிட்ட சங்கதிகளைப் பற்றி நமக்கு செய்ய ஏதுமில்லை.  நடந்து கொண்டிருப்பவைகளிலும், நடக்கப்போவைகளிலும்தான் எவ்வளவு மர்மங்கள்?  இந்த மர்மங்கள் தரும் தொடர்ந்த அவஸ்தைகளால் சல்லையுறும் இந்த மனது நடந்தவைகளை நினைவு கொண்டு ஆறுதலடைகிறது. எதிர்காலமே இறந்தகாலமாயிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்?  வாழ்க்கை போடும் எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்த நிலை கடந்துபோன காலம்.

புனைவேதும் இல்லாமல் கடந்த காலத்தை நினைவு கூறுதல் ஆகுமா?  எந்த வித மனச் சார்பும் இன்றி நடந்ததை நடந்தவாறே நினைக்கக் கூடுமா நம்மால்?  முடியாதென்றுதான் தோன்றுகிறது.  சொல்லப்போனால், உண்மை என்பது இல்லை.  உண்மை கூட ஒரு அபிப்பிராயம்தானே?  நடந்ததை நடந்தவாறே சொல்லுகிறேன் என்பதெல்லாம் சும்மா.  நடந்ததை உணர்ந்தவாறு வேண்டுமானால் சொல்லலாம். உணர்ந்தவாறு சொல்வதில் வேண்டுமென்றே பொய்யைக் கலந்து சொல்லாமல் இருப்பதே அந்த கடந்த காலத்திற்கு நாம் காண்பிக்கும் விசுவாசம்.  ஆனால் புனைவுகளும் ஜோடனைகளும் எப்படியோ அபிப்பிராயத்தில் கலந்துவிடுகின்றன, நமக்குத் தெரியாமலேயே.  நீதிமன்ற மரக் கட்டகங்களிலே குற்றவாளியையோ, சாட்சியையோ நிறுத்தி, கடந்த காலத்தின் உண்மைகளை மட்டும் புனைவில்லாமலும், பொய்யில்லாமலும் அவர்களிடமிருந்து உரித்து எடுத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்துடன் கேள்விகளால் துளைக்கும் வழக்குரைஞர்கள் சர்க்கரையில் இருந்து இனிப்பைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் இருப்பதாகவே தோன்றும்.  நினைவும் புனைவும் எப்போதும் ஒன்றை ஒன்று புணர்ந்தபடியே உள்ளன.  நடந்த ஒன்றைப் பற்றிய உனது வாக்குமூலம் உன் உண்மை, இது அதன் பற்றிய என்னுடைய உண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.  உண்மையில், உலகம் பார்வைகளால் ஆனது.  எத்தனை பேர் இங்கு உள்ளனரோ அத்தனை உலகங்கள் உள்ளன.

சுய சரிதை எழுதுவோர் அனைவரும் தங்களுடைய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே ஆரம்பிக்கின்றனர்.  பல உண்மைகளைச் சொல்லவில்லைஎன்றும், ஆனால் பெரும்பாலும் உண்மைகளை மட்டுமே சொல்லியிருப்பதாகவும் தங்களின் பாயிரத்தில் சொல்லுகின்றனர்.  தன்னுடைய சுய சரிதையான "என் கதை"-யில் நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளையவர்களும் இப்படியான  வாக்குமூலம் ஒன்றுடனே ஆரம்பிக்கிறார்.  இதில் இருக்கும் நிகழ்ச்சிகள் நடந்தவை என்றும், "ஆனால் ருசிக்கும்படியான முறையில் எழுதியிருக்கிற ஜோடிப்பு மட்டும் என்னுடையது" என்றும் கூறி, தன வாழ்க்கை கதையைத் தொடங்கும் பிள்ளையவர்கள் ஒரு மாபெரும் மானுடனின் கதையை பிரதி முழுதும் சுவைகுன்றாமல் சொல்லியிருக்கிறார்.  1888-ல் போலிஸ் ஏட்டுக்கு எட்டாவது குழந்தையாகவும், முதல் ஆண் குழந்தையாகவும் சேலம் ஜில்லாவின் தெற்குக் கோடியில் இருந்த மோகனூர் கிராமத்தில் பிறந்த பிள்ளையவர்கள் பிறவிக் கலைஞர்.  யாரும் சொல்லித் தராமல் சைத்ரீகம் கைக்குப் பழக்கமாகிறது.  எதையும் சித்திரமாகவே பார்க்கும் சிறுவன் ராமலிங்கம் மிகவும் செல்வாக்காக வளரும் பிள்ளை.  விரும்பியது பெரும்பாலும் உடனே கிடைக்கிறது.  

 சிறுவன் ராமலிங்கத்தின் பள்ளிப் படிப்பு முதல் தண்டி யாத்திரையின் தமிழ் நாட்டுப் பதிப்பான உப்பு ஊர்வலம் வரை, இவரின் கலையுள்ளமும் கவியுள்ளமும் நிறைந்து கிடக்கின்றன.  இன்னொன்று, இந்தக் கலையுள்ளத்திற்கான பயிற்சி எதையும் இவர் சிறப்பாகப் பெறவில்லை.  விரும்பியதை வரைகிறார்.  பொங்குவதை எழுதுகிறார்.  ஆங்கிலப் பயிற்சியும் உண்டு.  பள்ளியில் எல்லா வியாசப் பயிற்சிகளிலும் பாராட்டும்படியாக வந்த இவர், தன் சுயசரிதையில் தனித்துத் தெரிவது, பயன்படுத்தியிருக்கும் உரைநடையில்.  தனித் தமிழைத் தவிர்த்து, மணிப்பிரவாள  நடையில், காலக் கிரயப்படி எழுதாமல், காலத்தை முன் பின் நகர்த்தி, ஒவ்வொரு அத்தியாயமும் முழுமையடைந்த ஒன்றாக எழுதப்பட்டிருப்பது அன்றைய காலத்தில் மிகவும் நவீனமான முயற்சியாக அறியப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியுள்ள வாசகன் பிரதி முழுவதையும் படித்துவிட்டு தன் முயற்சியில் ஒருவாறு காலக் கிரயத்தை அவதானிக்க முடியும். 

"என் கதை" பிள்ளையவர்களின் குடும்பத்து கதையும் கூட.  இக்கதையின் தன்னிகரில்லா கதைமாந்தர் வெங்கட்ராம பிள்ளை - கவிஞரின் தந்தையார்.  இவர் தான் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி.  துரைமார்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் போலிஸ் ஏட்டு ஆன இவர் மகனின் மீது எல்லையற்ற பாசம் வைத்திருப்பவர்.  மகனுக்காக மறுகுபவர்.  தன் உறவுக்காரப் பெண் முத்தம்மாளை கவனிக்கும் இவர், இவள் தன் மகன் ராமலிங்கத்திற்கு சரியான ஜோடி என்று முடிவு செய்கிறார்.  இவருக்கும் முத்தம்மாளுக்குமிடையேயான உறவு நிலையை  அற்புதமாக ஒரு சினிமா கதாசிரியனுக்கே உரிய பாணியில் விவிரிக்கிறார் கவிஞர்.  தன் குழந்தைகளைவிட அதிக பாசமும் அன்பும் வைத்திருக்கும் முத்தம்மாளை தன் மகன் ராமலிங்கம் வெறுக்கிறான் என்பது அவருக்கு விழும் முதல் அடி. எதற்குமே வாழ்க்கையில் கலங்காத வெங்கட்ராம பிள்ளை மகன் முன் நின்று மன்றாடி கண் கலங்குகிறார்.  ஒரு பிரமிப்பான சினிமாவின் மிக முக்கியமான காட்சி போன்று பிரதியில் வெளிவந்திருக்கும் தருணம் இது.

பிரதி முழுக்க படித்த பிறகும் எதுவும் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ஆச்சர்யத்தின் மூலம், ஒரு கூர்த்த திரைக்கதைத் திட்டத்துடன் அத்தியாயங்கள் எழுதப்பட்டிருப்பதுதான்.  ஒவ்வொரு அத்தியாயமுமே ஒரு தனி மனிதனின் வாழ்வில் முக்கியமான காலகட்டத்தைப் பேசுகிறது.  தன்னுடைய மனைவி முத்தம்மாள்தான் கவிஞர் காதலித்த முதல் பெண்ணா?  அந்த சீதா இவருக்கு யார்?  சீதா இவரைப் பற்றி என்னதான் நினைத்தாள்?  தன் நண்பன் மண முடிப்பதாக இருந்த அவனின் முறைப் பெண்ணான சீதா, கவிஞரிடம் தன்னை மனதளவில் ஒப்படைத்திருந்தாளா? நண்பன் வெங்கடவரதனுக்கு சீதாவின் மேல் காதல் இருந்த நிலையில், சீதாவும் கவிஞரும் பழகியதை அவன் வெள்ளந்தியாக பாராட்டுகின்றானா, துரியோதனன்கள் இந்த நாட்டில் எப்போதுமே பிறந்து கர்ணன்களைப் புரிந்துகொண்ட வண்ணமே உள்ளனரா?  வாழ்வின் போக்கு திசை மாறி அடித்து, வெங்கடவரதனும் இல்லாமல், ராமலிங்கமும் இல்லாமல், எதோ ஓர் மைசூர் பணக்காரருக்கு வாழ்க்கைப்பட்டு,  உடனடியாக ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளுக்கு தாயாகி, அவசரமாக விதவையாகி, பதினைந்து வருடத்தில் ராமேஸ்வர ரயில்வே பிளாட்ஃபாரத்தில் அகஸ்மாத்தாக ராமலிங்கத்தை கண்டுபிடிக்கும்  சீதா தன் வாழ்க்கையில் கண்டுபிடித்ததுதான் உண்மையில் என்ன?  நிராசையா?  1927-ல் சீதா செத்துப் போன செய்தி கவிஞருக்கு கிடைக்கும்போது, வாசகன் திக்கித்துப் போகிறான்.

கவிஞரின் வாழ்க்கை, ஒவ்வொருவருடையது போலவே, சுவராஸ்யங்கள் நிறைந்ததாக உள்ளது.   கவிஞரின் தாயார் பிடித்துத் தந்த இலுப்ப மர பேய், பேய் பிசாசுகளில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவைகள் உண்மையில் யார் என்று காட்டிக்கொடுப்பதாக உள்ளது.  இதற்கு சற்றும் சுவராஸ்யம் குறையாத இன்னொரு பகுதி மாணிக்கம் நாயக்கருடன் கவிஞர் டெல்லி, பெஷாவர், காசி போன்ற ஊர்களுக்கு பிரயாணம் செய்வது.  வட இந்திய பண்டாக்கள் என்றுமே மாறுவதில்லை என்பது இன்றும் காசிக்குப் பொய் வருகிற பிரயாணிகள் உணர்வார்கள்.

 அடுத்து, வாசகனுக்குப் பெரிய பிரமிப்பைத் தருவது, கவிஞர் சந்தித்து உறவாடும் இந்த தேசத்தின் ஆகப்பெரிய ஆளுமைகள்.  ஈரோடு ராமசாமி நாயக்கர், ராஜகோபாலச்சாரியார், காந்தியடிகள், சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ஷண்முகம் செட்டியார், கிட்டப்பா போன்ற மாபெரும் ஆளுமைகளை பக்கத்தில் இருந்து பார்த்து பழகும் வாய்ப்பைப் பெற்ற கவிஞர், தானும் அந்த வரிசையிலேயே நின்று காட்சியளிக்கும்போது,  வாசகன் மகிழ்ந்து போகிறான்.

 இந்த சரிதையில் வாசகனைப் பெரிதும் கவருவது அனாவசியமாக வெளிப்பட்டிருக்கும் நேர்மை.  குழந்தை இல்லாத காரணத்தால், இரண்டாவதாக தன்னுடைய தங்கையையே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் மனைவி முத்தம்மாளிடம் கவிஞர் கேட்கிறார்: "சரி, எனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நான் இன்னொரு பெண்ணை கலியாணம் செய்து கொள்கிறேன். உனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நீ  இன்னொரு புருஷனைக் கலியாணம் செய்து கொள்கிறாயா?"  பிரதியின் இன்னொரு இடத்தில், காந்தியாரின் நேர்மையில் உவகை கொள்கிறான் வாசகன்.  ஏற்கனவே ஒப்புக்கொண்டு மக்களிடம் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருக்கிற கரூர், கோபி செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு உடல் நலம் பேரில் காந்தி வர மாட்டார் என்று ராஜாஜி கறாராக சொல்லிவிட, திகைத்துப் போகிறார் கரூர் காங்கிரஸ் பிரதிநிதியான கவிஞர்.  வாய்ப்பு கிடைத்ததும், காந்தியிடமே இதுபற்றி நேரடியாக கேட்கப்படுகிறது.  உடனடியாக, பயணத் திட்டத்தில் ஏற்பட்ட இத்தவறை நீக்கி கரூர் மற்றும் கோபிக்கு வருவதாக உறுதியளிக்கிறார் தேசத்தந்தை.

ஒரு நவீன நாவலுக்கு சற்றும் குறையாமல் வேகமெடுத்துப் பாயும் இந்த வரலாறு தனது கடைசிப் பக்கங்களில் கவிஞரின் வறுமையை சுய பச்சாதாபம் இல்லாமல் சொல்லிச் செல்கிறது.  கவிஞர் தன் இலக்கிய ஆளுமையின் உச்சத்தில் இருந்த காலமும் இதுவே.  திருக்குறளுக்கு பரிமேலழகர் உரைதான் லட்சியமானது என்பதனை கேள்விக்குள்ளாக்கும்  கவிஞர், அதற்கான மாற்று உரை எழுதும் பணியில் ஈடுபடுகிறார்.  காங்கிரஸ் சர்க்கார் பெரிதாக கவிஞருக்கு எதையும் செய்துவிடவில்லை, இரண்டொரு முறை ஜெயிலுக்குள் தள்ளியதைத் தவிர.  உதவ விரும்பும் நண்பர்களை விதி வழிமறிக்கிறது.  எல்லாவற்றையும் தன் பழைய வீட்டு மாடியில் இருந்து அவதானிக்கும் கிழவரான இந்த கவிஞர் யார் மீதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் தன் வறுமையை சொல்லுகிறபொழுது, கவிஞனாகவோ தேச பக்தனாகவோ நல்லவேளையாக நாம் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இப்பிரதி முழுக்க நம்மை சுண்டியிழுப்பது கவிஞரின் ஆற்றொழுக்கான தமிழ் உரைநடை.  எந்தவித வர்ணமும் பூசப்படாத உரைநடை.  எளிமையைக் கூட சிலர் வரவழைப்பார்கள்.  இவரிடம் எளிமை இயல்பாக உள்ளது.  முற்று முழுவதுமாக இதைப் படித்து முடித்தவுடன் ஒரு Bildungsroman ரக நாவலை முடித்த திருப்தி.  இதன் இறுதிப் பக்கத்தில் பாரதியார் அதிகாலை வேளையில் பித்தர் போல பாடியதைக் கேட்ட கவிஞர், அவரின் வடிவத்தை சாயத்தில் வரைய ஆசைப்படுகிறார்.  ஆனால், அவருக்கு பாரதியாரின் உள்ளம்தான் முன் வருகிறது.  உருவம் வருவதில்லை.  பாரதியின் உள்ளமும் தெரியக்கூடிய அவரின் உருவத்தை விரைவில் அமைப்பதாக கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உறுதியளிக்கிறார். "என் கதை" படித்து முடித்த பிறகு, வாசகனுக்கு கவிஞரின் உருவம், உள்ளம் மட்டுமன்றி அவரின் வாழ்க்கை, தேசம் எல்லாமே காலத்தின் கல்லிடுக்குகளிலிருந்து சுரந்து மெல்ல தளும்பி மேலே வந்து கண்ணையும் கருத்தையும் நிறைக்கிறது.